கருத்தியல் முதல் வாதம் Vs பொருள் முதல் வாதம்
கருத்தியல் முதல் வாதம் Vs பொருள் முதல் வாதம்
மனித மனமானது, அடுத்த வேளை உணவுக்கான சேமிப்பை தொடங்கிய காலத்தில் இருந்து, அடுத்த நாளிற்கான உணவுப் பதுக்கலுக்கு பழக்கப்பட்ட காலந்தொட்டு, பல்வேறு சித்தாந்தங்களை கடந்து வந்திருக்கிறது. அதிலும், எண்கள் சார்ந்த சமகால டிஜிட்டல் யுகத்தில் சேமிப்பு, பதுக்கல், கடத்தல் என்ற நிலையில் அசுர மாற்றம் அடைந்து வருகிறது. அதேவேளையில், பண்பியல் சார்ந்த காரண, காரியங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வது வீண் செயலாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கருத்தியல் மற்றும் பொருள் முதல் வாத சித்தாந்தங்கள் மக்களின் சிந்தையில் நித்தமும் ஊடுருவி குறுகிய கால வாழ்க்கையை திக்குமுக்காட செய்கிறது.
அதாவது, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஓர் சித்தாந்தம் வலு பெறும் மற்றொரு சித்தாந்தம் வலு இழக்கும். இவை, ஒவ்வொரு காலத்திலும் மாறி, மாறி வரும். அந்த சமநிலையில் மக்கள் இயங்கத் தவறும்போது, சித்தாந்தப் போட்டி ஏற்பட்டு இருமைவாதமாக உருவாகிறது. இதில், பண்பாடு சார்ந்த காரணிகளால் கருத்தியலை முன்னெடுத்தவர் பொருள் முதல்வாதத்தை எதிர்க்கலாம். அல்லது, பொருள் முதல் வாத பண்பாட்டில் வளர்ந்தவர் கருத்தியலை துச்சமாக எண்ணலாம். இந்த இருவேறு நிலையில், மனிதனின் தற்போதைய டிஜிட்டல் வாழ்க்கை நடைபோட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், கருத்தியல் மற்றும் பொருள் முதல் வாத கொள்கையினால் சமூகத்தில் எத்தகைய தாக்கம் உண்டாகிறது என்ற கேள்வி அவசியமாகிறது. ஏனெனில், இது, சித்தாந்த உரையாடலாக மட்டும் இல்லாமல், சமகால வாழ்க்கையில் நாம் தினமும் எதிர்கொள்ளும் அவலங்களுக்கான காரணங்களை ஆராயும் வழிகாட்டியாக அமையும். அத்தகைய சித்தாந்த சிக்கல்களை களைய, கலங்கரை விளக்கத்தின் ஒளியை ஒற்றையடி பாதையாகக் கொண்டு பயணிப்போம் வாருங்கள்...
மனிதனின் டிஜிட்டல் வாழ்க்கையானது மென்பொருளுக்கு அடுத்தபடியாக, ‘அல்காரிதம்ஸ்’ என்ற எண் சார்ந்த செயல்முறைகளை கொண்டு இயங்குகிறது. ஆனால், சிந்தனை எனும் எண்ணங்களை கொண்டு இயங்கவில்லை. சமகால உதாரணமாக, திருமணத் தகுதிகளில் முக்கியத்துவம் பெறுவது ஆண்களின் சம்பளம் எத்தனை டிஜிட்டில் உள்ளது ? பெண்ணிற்கு எத்தனை சவரன் ? என்ற எண்கள் சார்ந்த வாழ்க்கை நடந்து வருகிறது. மாறாக, குணாதிசயம், அறநெறி, உயிர்மை ஒழுகுதல் போன்ற சித்தாந்தங்கள் பேசு பொருளாக இருப்பது குறைகிறது.
அதாவது, ‘மனிதனுக்கு உயர்ந்தது மானம்’, ‘கற்றோறுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு’, ‘பேராசை பெரு நஷ்டம்’, ‘இரத்தல் கொடிது’ என்ற கருத்தியல் ரீதியிலான பொன் மொழிகள் மனிதனின் வாழ்வியலுக்கு உகந்ததாக எண்ணி பள்ளிகளில் இருந்தே வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். அதேவேளையில், ‘பணம் இருந்தால் பத்தும் பறந்துபோகும்’, ‘பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை’, ‘காசேதான் கடவுளடா’ என்ற பொருள் முதல் வாத வாசகங்கள் மனிதனின் வாழ்வியலுக்கு உகந்ததாக கொண்டு நடைமுறை வாழ்க்கையில் சமூகம் வளர்த்தெடுக்கப்படுகிறது.
இதன் விளைவாக, மனித வாழ்வியலில் நற்செயலாக கருதப்படும் மானம், குணம், அன்பு, கல்வி, மரியாதை என்ற பண்பியல் சார்ந்த காரணிகள் கருத்தியல் முதல் வாதத்தில் முதன்மையாகக் கொண்டும். இந்தியாவில் செல்வமாக மதிப்பிடப்படும் பணம், தங்கம், நிலம், வீடு, வாகனம் போன்றவை எவ்வளவு பணம், எத்தனை வீடுகள் என்ற எண்கள் சார்ந்த காரணிகள் பொருள் முதல் வாதத்தில் முதன்மையாகக் கொண்டும் மனித இயங்கியல் இயங்கி வருகிறது. இந்த இருவேறு நிலைகளில் மனிதனின் மனம் இரண்டில் ஒன்றிற்கு அதிக ஆட்படுகிறார்கள். அல்லது இடையில் மாற்றம் கொள்ளுகிறார்கள். இந்த மடைமாற்றம் சமூக சிக்கல்களுக்கு காரணமாகவும், குடும்ப சிக்கல்களுக்கு அடித்தளமாகவும் அமைகிறது.
ஏனெனில், சமூக கட்டமைப்பு என்பது மனித கட்டமைப்பின் கூட்டுச் சேர்க்கை ஆகும். அவ்வாறு இருக்க, தனி மனித கட்டமைப்பு என்பது ஒருவரை அடையாளப்படுத்தப்படுவது இவர் ‘அன்பானவர், அறிவானவர், நல்ல குணம் உள்ளவர்’ என்ற கருத்தியல் நிலையை உயர்வாகவும், பணக்காரர், செல்வந்தர், செல்வாக்கு மிக்கவர் என்ற பொருளியல் நிலையில் உயர்வாகவும் கொள்ளப்படுகிறது. ஒரு கட்டத்தில் கருத்தியலுக்கும், பொருளியலுக்கும் போட்டி நிகழும் எனில், கருத்தியலாளர்களை அடக்க முதலில் கையாளப்படும் ஆயுதம் பொருளியல் தன்மையில் பலவீனத்தை ஏற்படுத்துவது ஆகும்.
அதன் எச்சமாகவே, ஏழைகளின் குடிசை வீட்டை எரிப்பது, வாகனங்களை தீக்கு இரையாக்குவது, பணியில் இருந்து நீக்கம் செய்து, சம்பளம் வர விடாமல் தடுப்பது போன்ற செயல்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
மாறாக, பொருளியல்வாதிகளை எதிர்க்க கருத்தியலாளர்கள் படைப்பாக்கத்தை ஆயுதமாக ஏந்தி வருகின்றனர். அதன் வெளிப்பாடாகவே, உணர்ச்சிக் கவிதைகள், தத்துவங்கள், ஓவியங்கள்,
கருத்தாக்கங்கள், பாடல்கள், நாடகங்கள், புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், ‘பொருளாதாரம் மிக்கவர்கள் சொல்வதே சரி’ என்று பெரும்பாலும் நம்பிக்கைக் கொள்ளும் சமகால சமூகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டு, கருத்தியல் வாதத்தை முன்னெடுப்பது அம்மண ஊரில் கோமணம் கட்டுவதற்கு ஒப்பாகும். ஏனெனில், நாம் வாழ்வது பொருளாதாரம் (பொருளியல்) சார்ந்த வாழ்க்கை.
கட்டளை:
நாம் சமகால டிஜிட்டல் யுகத்தில் சிந்தனையின் மூலம் செயல்படாமல் கட்டளைகள் மூலம் செயல்படும் போக்கு உருவாகியுள்ளது. உதாரணத்திற்கு, உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்நிலை அதிகாரிகள் கட்டுப்படுவது, இராணுவ தளபதியின் உத்தரவுக்கு சிப்பாய்கள் கட்டுப்படுவது, அரசாங்க கட்டளைக்கு மக்கள் கட்டுப்படுவது என்ற கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம். அதாவது, சிந்தனை சார்ந்து பார்க்கும்போது ஏன், எதற்காக என்ற சித்தாந்தங்கள் இன்றி, ‘ப்ரோக்ராம்’
செய்யப்பட்ட கோடிங்ஸ் போன்று கொடுக்கப்படும் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம். இடப்படும் கட்டளை வேலை
என்னவோ… அதற்கே தற்போது பணி புரிந்து வருகிறோம். மாறாக, சிந்தனைக்கான வேலையை தினமும் குறைத்து, ஒரு கட்டத்தில் சிந்தனை இன்றிய வாழ்க்கையை வழக்கமாக மாற்றி வருகிறோம். இதனை எண்களாகவே வரையறுக்கலாம். ஏனெனில், கொடுக்கப்பட்ட (Command) கட்டளைக்கு செயல்படுகிறோம்.
சரி, இதற்கும், தனி மனித வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். சம்பந்தம் உண்டு. அதாவது, சூப்பர் ஈகோ கருத்தாக்கத்தின்படி, ‘ஒருவர் நமக்கு இடும் கட்டளைக்கு ஏற்ப நாம் செயல்படுவது போல், நமது மனம் நமக்கு நாமே உயர் அதிகாரியாகக் கொண்டு தனக்கு தானே கட்டளையிட்டு தீர்மானிக்கிறது’. இதனால், எனக்கு பிடிக்கிறது செய்கிறேன். எனக்கு வேண்டும் கேட்கிறேன். எனது மகிழ்ச்சி எனக்கு முக்கியம் என்ற ‘தான்’ என்ற நிலையில் கருத்தியல் சித்தாந்தம் குறைத்து, பொருளியல் சித்தாந்தம் சார்ந்து இயங்கி வருகிறது. ஏனெனில், தான் என்ற அகந்தையை அறிவது கருத்தியல்.
ஆனால், ‘தான்’ எனும் அகந்தை பெரும்பாலும் பொருளியலை மையமாகக் கொண்டு
சமகாலத்தில் அணுகுவதால், பொருளியல் சார்ந்தே கட்டளைகள் இயங்குகிறது. இதனால், எனக்கு நிகர் யாரும் இல்லை. நான் யார் தெரியுமா ? எனக்கு சமமானவர் நீ அல்ல, எனக்கு எப்போதும் மரியாதை மேலோங்கியே இருக்க வேண்டும், எங்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற தன் மன கட்டளைக்கு ஆட்பட்டு பொருளியல் சார்ந்த ஆதிக்க மன நிலையில் செயல்பட்டு வருகின்றனர். இதனால், மனித மனம், மனிதத் தன்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. அதன்வெளிப்பாடாகவே,
குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் தன்னை பொருளியல் ரீதியில் பார்க்கும் போது, மற்றொருவரையும் பொருளியல் ரீதியாகவே பார்ப்பர். கருத்தியல் ரீதியிலான அறிவாளியாகவே இருந்தாலும், அவரை எள்ளி நகைக்கும் குணாதிசயம் கொண்டு பொருள் சார்ந்த கண்ணோட்டத்திலேயே செயல்படுவர். உதரணமாக சுப நிகழ்ச்சிகளில் செல்வந்தர், உயர் அதிகாரி, வளமையானவர் போன்ற பொருள் சார்ந்த நபர்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்படுகிறது. மாறாக, அதிக அனுபவம் கொண்ட, கருத்தியல் முக்தி அடைந்த நபர்களை ஆடை, அணிகலன், ஆபரணங்கள் என்ற புறக் காரணிகளின் மூலம் பொருளியல் பார்வையில் அணுகுவதால், கருத்தியல் வாதிகளை இலகுவாக நினைக்கும் மன நிலையைக் கொண்டு சமூகம் செயல்பட்டு வருகிறது. இதனால், கருத்தியல் சித்தாந்தங்கள் இந்த இடங்களில் தோற்றுவிடும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் விரிவாக்கமாகவே, சமூகத்தின் நீட்சியாக ஊடகச்
செய்திகளில் வெளிப்படுகிறது.
செய்தியில் பொருளியல் ஆதிக்கம்:
அதாவது, வர்த்தக உலகில் பெருநிறுவன முதலாளிகள் தங்களின் பொருட்கள் அதிக விலைக்கு உயர்த்தப்படும்போது, அதன் விலை உயர்வு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்ற எண்களில் மட்டும் செய்திகள் வருவதால் எண்கள் சார்ந்து மட்டுமே காலம் நகரும். இவை, பெரு முதலாளிகளின் வங்கியில் இருக்கும் பணத்தின் எண்களை மேலும் அதிகரிக்கும். ஆனால், பொருட்கள் வாங்க முடியாதவர்களின் வாழ்வியலில் எண்கள் சம்மந்தப்படாமல், எண்ணங்கள் சம்பந்தப்படும் என்பதை செய்திகள் பதிவு செய்வது இல்லை.
அதாவது, பள்ளி பயிலும் தன் குழந்தைக்கு தேவையான பாட புத்தகம் விலை அதிகமானதால், அதனை வாங்கிக் கொடுக்க முடியவில்லை, எனில் தந்தை அல்லது தாய்க்கு ஐம்பது ரூபாய் என்ற எண்கள் மனதில் நிற்காமல், குழந்தையின் படிப்பு, எதிர்காலம், மற்ற குழந்தைகள் முன் ஏற்படும் மன ரீதியிலான பிரச்சனை, தாழ்வு மனப்பான்மை போன்ற உளவியல் சார்ந்த சம்பவங்கள் மனதில் எழும். இதனை, பணத்தின் மதிப்பு என்று எண்ணாமல், குழந்தையின் எதிர்காலம் என்று எண்ணும் எண்ணம் சார்ந்த கருத்தியல் ஏற்படும்.
ஆனால், செய்திகள் ‘புத்தகம் விலை 50 ரூபாய் உயர்வு’ என்ற எண் சார்ந்த மன நிலையிலேயே இயங்கி வருகிறது. இதன் மூலம், எண்களுக்கும், எண்ணங்களுக்கு இடையிலான சிக்கல்கள் இருவேறு வர்க்க நிலைகளில் மேலும் இடைவெளியை உண்டாக்கி வருகிறது. இதற்கு, கருத்தியல் மற்றும் பொருள் முதல்வாத குணாதிசயங்கள் இடையிலான புரிதல்களை ஊடகங்களும், உளவியல் பகுப்பாய்வாளர்களும் வெளிக்கொண்டு வருவதில் சுணக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.
மேலும், கருத்தியலை பின்னுக்குத் தள்ளி பொருளியல் நிலையை முன்னுக்கு கொண்டு வரும் இக்காலக்கட்டத்தில், மனித உணர்வு குறைந்து, மனித செயல்பாடுகள் அனைத்தும் கொடுக்கல், வாங்கல் என்ற வணிக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆகவே, கருத்தியல் வளமைக் கொண்ட அறிவார்ந்த சான்றோர்கள் ஏதோ ஒரு மூலையில் தன் வழியில் தானே பயணிப்பதும், பொருளியல் சித்தாந்தத்தில் வளமைக் கொண்டவர்கள், ஏராளமானோர் மத்தியில் விளம்பரங்களாக தங்களை பரிசுத்தமானவர்களாக அரங்கேற்றம் செய்யும் அவலமும் நம் கண் முண்ணே அன்றாடம் நிகழ்ந்து வருகிறது.
சரி, கருத்தியல் முதல்வாதத்தை ஆதரிப்பதா ? அல்லது பொருளியல் முதல்வாதத்தை ஆதரிப்பதா ? என்ற பாமர கேள்வி எழும் முன் இந்த இரண்டின் அடிப்படையை முதலில் அறிவது அவசியம்.
அதாவது, தனி மனிதனின் இணைவு வாழ்வு குடும்பம் ஆகிறது. குடும்பங்களின் இணைவு வாழ்க்கை சமூகம் ஆகிறது. இதில், குடும்பத்தின் உணர்வு மேலோங்கி, குடும்பத்திற்கான பொருளீட்டலுக்காகவே சமூகத்தை தொடர்பு கொள்ளும் நிலை உருவாகிறது.
“சமூக வாழ்நிலை என்பது மக்கள் இயற்கையுடனும் தம்மில் ஒருவருக்கொருவரோடும் கொண்டிருக்கின்ற பொருளாயத உறவுகள்; அவை மனித சமூகம் நிறுவப்படுகின்ற பொழுது சேர்ந்து தோன்றுகின்ற உணர்விலிருந்து சுதந்திரமான முறையில் இருக்கின்றன”. (ஸி.பெர்பேஷ்கினா, டி.ஸேர்கின், எல்.யாக்கவ்லெவா.
1987, ப.52)
அத்தகைய தொடர்பு நிலையே பொருளீட்டலுக்கான அச்சாரமாக இருக்கிறது. இதில், சமூக கருத்தியல் இல்லை. மாறாக, குடும்ப உணர்வு உண்டு. இதனால், பொருள்முதல் வாதமே முன்னிலைப்படுகிறது. ஆனால், தனி மனித வாழ்வு, சமூக வாழ்நிலையில் இணைய, சமூகத்துடனான பொருளாதார பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. இது, சுதந்திரமான முறையில் கட்டுப்பாடின்றி செயல்பட்டு வருகிறது. அதன்வெளிப்பாடாகவே, உலக மயமாதல் தொடங்கியுள்ளது.
“சமூக வாழ்நிலை என்பது மக்கள் இயற்கையுடனும் தம்மில் ஒருவருக்கொருவரோடும் கொண்டிருக்கின்ற பொருளாயத உறவுகள்; அவை மனித சமூகம் நிறுவப்படுகின்ற பொழுது சேர்ந்து தோன்றுகின்ற உணர்விலிருந்து சுதந்திரமான முறையில் இருக்கின்றன.” (ஸி.பெர்பேஷ்கினா, டி.ஸேர்கின், எல்.யாக்கவ்லெவா.
1987, ப.52)
இதில், குடும்ப உணர்வு, சமூக வாழ்நிலை இரண்டும் பொருளாதாரத்தை முன்னிறுத்தி நகர்வதால், முதலாளித்துவம் மெருகேருகிறது. அதன் அடுத்தக் கட்டமாக, ஆதிக்கம் கொண்டவர்கள் முதலாளித்துவவாதிகளாகவும், அடிபனிந்து செல்பவர்கள் அடிமைகள் அல்லது தொழிலாளர்களாகவும் ஏற்ற, தாழ்வு உண்டாகும்போது இதனை சீராக்க தத்துவங்கள் உண்டாகிறது. அத்தகைய தத்துவங்களே கருத்தியல் வாதத்தை மேம்படுத்துகிறது. பொருளியல் வாதம் முன்னின்று தொடங்கினாலும், அதனை சீராக நிறைவு செய்ய கருத்தியல் வாதம் அவசியமாகிறது.
“வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் மார்க்சும், எங்கெல்சும் பிறந்ததனால் மட்டும் தோன்றிவிடவில்லை. முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் அதிகம் தீவிரமடைந்தபடியால், தொழிலாளி வர்க்கத்துக்குப் புரட்சிகரமான தத்துவம் அவசியமாக இருந்தபடியால் அது தோன்றியது”. (ஸி.பெர்பேஷ்கினா, டி.ஸேர்கின், எல்.யாக்கவ்லெவா.
1987, ப.53)
இருந்தாலும்,
பொருளியலுக்கான அடிப்படையாக குடும்ப உணர்வு உள்ளது. அதாவது, மனித வாழ்வு நிலையில் இருந்து தான், தன் குடும்பம் என்ற உணர்வு நிலை மேலோங்கி பொருளீட்டல் உண்டாகிறது. இதுவே, அடுத்தக்கட்ட நகர்வாக, சமுதாய வாழ்வு விசயத்திலும் உணர்வு மேலோங்கியுள்ளது. இதற்கு அடிப்படையாக அமைவது பொருள்முதல்வாதமாகும்.
“வாழ்நிலையிலிருந்து உணர்வு தோன்றுகிறதேயன்றி உணர்விலிருந்து வாழ்நிலை தோன்றுவதில்லை என்று பொருள்முதல்வாதம் பொதுவாக விளக்குகிறதாகையால் மனிதகுலத்தின் சமுதாய வாழ்வு விஷயத்திலும் சமுதாய உணர்வு சமுதாய வாழ்நிலையிலிருந்தே தோன்றுகிறது என்று பொருள் முதல்வாதம் விளக்கித் தீர வேண்டியிருக்கிறது” (வி.இ.லெனின், 1979, ப.58).
ஆனால், அதனை செப்பனிட்டு செழுமைப்படுத்த முயல்வது கருத்தியல்வாதம் ஆகும். சான்றோர்கள் பலர் குடும்ப சூழலை விட்டு, சமூக நாட்டத்தை விரும்புபவர்கள் தொடக்கத்தில் குடும்ப உணர்வில் தொடங்கினாலும், அவர்களது சமூக அவா அவர்களை சமூகத்திற்கான உணர்வாக பரிணமித்து மிளிர்கிறது. அதன்வெளிப்பாடாகவே, மார்க்ஸ் தன் குடும்பத்தை விட, சமூக விழிப்பை முன்னிறுத்தி செயல்பட்டார். இதற்காக, குடும்ப உணர்வை விட்டார் என்பது அர்த்தம் அல்ல, சமூகத்தை குடும்பமாக பார்த்தார் என்பதே அத்தகைய சான்றோர்களின் பார்வையில் பொருள் முதல்வாதம் கருத்தியல் வாதமாக அமைகிறது. அதன் வெளிப்பாடாகவே, பொருள்முதல்வாத கோட்பாடுகள் ஒரு வரைமுறைக்குள் கொண்டு வந்து, விதிகள், கொள்கைகள் வடிவமைத்ததே கருத்தியலாக உருமாறுகிறது.
சமகால பாமர மக்களின் பார்வையில், குடும்பம், குடும்பமாகவும், சமூகம், சமூகமாகவும் பார்ப்பவர்களின் மத்தியில் இருவேறு நிலை உண்டாகும். அத்தகைய நிலையில், மக்களின் குடும்ப உணர்வானது பிறரை சார்ந்து வாழ்தல் வேண்டும் என்ற இயற்கைவிதியின்படி, பொருளியல் வாதம் முன்னிறுத்தி, சமூகத்தில் பொருளாதார பரிமாற்றம் உண்டாக்கி, உலக பொருளாதார கண்ணோட்டத்துடன் வாழும்போது பொருளாயத முதல்வாதம் மட்டுமே உண்டாகும். இது, உலக கண்ணோட்டம். இதில், ஏற்றத்தாழ்வுகள் வரும். ஆனால், பொதுவுடமை என்ற ஆன்மிக கண்ணோட்டம் இருக்காது. அத்தகைய சீரற்ற வாழ்வை திறம்பட செம்மைப்படுத்த கொண்டுவரப்பட்டதே கருத்தியல் வாதம். ஆகவே, உலக கண்ணோட்டம் வேண்டுமா ? ஆன்மிகக் கண்ணோட்டம் வேண்டுமா ? என்ற கேள்விக்கு விடைகாணும்போது பொருள்முதல்வாதம், கருத்தியல் முதல்வாதம் இரண்டில் எது முக்கியம் என்பதை அறியலாம்.
இதில், ஆன்மிகக் கண்ணோட்டம் என்பது இறை, தெய்வீகத்தை குறிப்பது என்பது தட்டையாணது. பொதுவுடமை என்பதே அன்மீகம் ஆகும். இது, பண்பாட்டின் அடுத்தகட்டமான ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. பண்பாடு என்பது பண்படுத்திய மரபு எனில், ஞானம் என்பது பண்பாட்டின் முதன்மை எனலாம். அத்தகைய ஞானம் - பகுத்து அறியும் அறிவை முன்னிறுத்தியது. ஆகவே, பொருள்முதல் வாதம் - உலக கண்ணோட்டம், கருத்தியல் வாதம் - பகுத்தறிவு எனும் ஆன்மிகத்தை சாரும்.
ஆனால், காலத்தின் பார்வையில் நாம் அணுவிலும் குறைவான காலம் பயணிப்பவர்கள். இதில், கருத்தியல் வாதம் நீண்ட காலத்திற்கு தழைத் தோங்கும் அறிகுறிகள் உண்டு. ஆனால், பொருளியல் வாதத்திற்கு அத்தகைய அறிகுறிகள் இல்லை என்பது கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.
இதில், உங்களுக்கும், சமூகத்திற்கும் சீராண வாழ்வியலை எது கொடுக்குமோ எதைத் தேர்ந்தெடுப்பதே கருத்தியல் மற்றும் பொருளியல் சார்ந்த புரிதல் ஆகும். அதன் அடிப்படையில், கருத்தியலானது அறிவார்ந்த தனிமனிதன் மற்றும் அறிவார்ந்த சமூகம் வளர காரணமாக அமையும். பொருளியலானது, ஆடம்பர தனி மனிதன் மற்றும் ஆடம்பர சமூகம் உருவாகும். இதில், அறிவார்ந்த சமூகம் தன் பிள்ளை உள்பட அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும். ஆனால், ஆடம்பர சமூக என்றைக்குமே முடிவு பெறாது, அது அடுத்தக் கட்ட ஆடம்பரத்தை நோக்கி நகரும். ஒரு கட்டத்தில் கருத்தியல் வெறுமையால் ஆடம்பரத்தின் ஆசுவாசம் உணராது. வெறுமையில் சிக்கித் தவிக்கலாம். அச்சமயம் மனித பிறப்பே அர்த்தம் அற்றதாக உணரலாம். அதனால், கருத்தியலை பொருளியல் வழியில் ஆராயாமல், பொருளியலை கருத்தியல் அடிப்படையில் தேடும்போது இணைவுநிலைவாதமாக வாழ்வு
உருவாகி, சீராண வாழ் இயங்கியல் செயல்படும்.
சான்றாதாரம்:
· வி.இ.லெனின், 1979. தேர்வு நூல்கள். பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 1, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, ப.58.
· ஸி.பெர்பேஷ்கினா, டி.ஸேர்கின், எல்.யாக்கவ்லெவா. 1987. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? முன்னேற்றப் பதிப்பகம். மாஸ்கோ. ப.53
Comments
Post a Comment