திராவிடர்கள் Vs தமிழர்கள்

திராவிடர்கள் Vs தமிழர்கள்

                                                                                  


‘திராவிடர்கள் Vs தமிழர்கள்' என்ற தலைப்பில் ஓர் கட்டுரை எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், காலம் அந்த சூழலில் என்னை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதற்கு காரணம் ‘தமிழ் தன்னைத் தானே மீட்டெடுக்கும்’ என்பதாக நான் நினைக்கிறேன். இதற்கு தமிழ் அறிஞர்கள் உந்து சக்தியாக எப்போதும் இருப்பர்.  ‘தமிழ் இனி மெல்ல சாகும்’ என்பது எந்த அளவிற்கு உண்மையோ... அதேப் போன்று, ‘தமிழ் இனி மெல்ல வாழும்’ என்பதும் உண்மையே. ஏனெனில், உலக இயக்கமே ஓர் சுழ்ச்சி தான். ஒரு காலத்தில் இலை, தழைகளை ஆடையாக அணிவது பழங்குடியின பழக்கமாக கருதப்பட்டது. ஆனால், இன்று, மேற்கத்திய நாடுகளில் இலை, தழைகளை கொண்டு ஆடை வடிவமைப்பதை அதி நாகரீகமாக கருதுகின்றனர். சில நூற்றாண்டிற்கு முன், தமிழர்கள் தாலி கட்டும் பழக்கம் இன்றி, இணைந்து வாழ்ந்ததை முந்தைய பண்பாடாக கருதப்பட்டது. ஆனால், இன்று, அதனையே ‘லின் இன் ரிலேசன்சிப்’ என்ற சொல்லாடல் மூலம் நடைமுறையில் உள்ளது.  ஆகவே, எதுவும் ஓர் சுழற்சியே! அதுபோல, சில நூற்றாண்டுகளாக, மக்களை குழப்பும் ‘திராவிடம்’ என்ற சொல்லாடல், ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழை வென்றிட முடியாது என்பதை நிரூபிக்கும் ஓர் ஆதாரமே இந்த கட்டுரை.                                                                              

தமிழர்களின் எத்தகைய வரலாற்றை அறிய வேண்டும் என்றாலும் கடந்த கால அலசல் அவசியமாகிறது. ஏனெனில், ‘உலகின் முதல் மொழி தமிழ்’, ‘மூத்த இனம் தமிழர்கள்’, ‘உலகிற்கு நாகரீகம் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள்’,‘உலகின் 196 நாடுகளில் கடல் வழி வணிகம் செய்தவர்கள் தமிழர்கள்’ என்ற வரலாற்றுத் தரவுகள் தொன்மையான தமிழர் வரலாற்றை அறிய உதவுகிறது. இதில், தமிழர்களின் வரலாறு ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கார்டுவெல் போன்ற அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். சமகாலத்திய பண்பாட்டு ஆய்வாளரான ஒரிசா பாலு, கடலில் ஆமை வழித்தடத்தின் வழியே தமிழர்களின் வரலாற்றை அறியும் போது, தமிழர்களின் வரலாறு ஐந்து ஆயிரம் ஆண்டுகள் அல்ல, அது 50 ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டியது என்று வாதிடுகிறார். இதற்காக, உலக நாடுகளில் பயணம் செய்து அங்குள்ள தரவுகளை அதற்கு ஏற்ப நிறுவுகிறார். ''

சரி, தொல்லியல் ஆய்வுகள் என்ன சொல்கிறது என்று உற்றுநோக்கும்போது, மெசபொட்டோமியா, சிந்து சமவெளி நாகரீகமும் தமிழர்களின் நாகரீகமும் (திராவிட நாகரீகம், சரஸ்வதி நாகரீகம் என்று மடைமாற்றி, தற்போது திரித்து சொல்லப்படுகிறது) ஒத்துபோவதை பல வரலாற்று அறிஞர்கள் அங்கு கிடைத்த பானை ஓடுகள், தமிழ் வட்டெழுத்துகள், பிராமி கல்வெட்டுகள் மூலம் அசைக்க முடியாத ஆதாரத்தை கொண்டு வருகின்றனர். 



சரி, இவையெல்லாம் தமிழ், தமிழர்களாக இருக்கும் போது... திராவிடம் என்ற சொல்லாடல் எப்படி தமிழுக்கு போட்டியாக வந்தது ? என்ற வினாவை மனதில் ஓட்டி பார்க்கும் போதுதான்... நமக்கு துரோகம் செய்தவர்கள், செய்துக் கொண்டு இருப்பவர்கள் இன்னும் இந்த உலகில் இருந்து வருகின்றனர் என்பது புலப்படும். 

அதற்கான முதல் உதாரணமாக, திராவிடர் என்ற சொல்லாடல் ஐந்தாயிரம் ஆண்டு காலக்கட்ட வரலாற்றில் பார்க்கும்போது, சமஸ்கிருத வார்த்தையாக தெரியும். அதுவே, 50 ஆயிரம் ஆண்டுகால கட்ட வரலாற்றில் பார்க்கும்போது அதுவும் தமிழில் இருந்து பிரிந்த சொல்லாகவே இருக்கும். இருந்தும், திராவிடம் என்ற சொல்லாடல் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஓர் அரசியல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், சமகாலத்திய அரசியலை மட்டும் வைத்துக் கொண்டால், திராவிடரை புறந்தள்ளி தமிழராக சொல்லப்படுவதே அறிவுடமையாக இருக்கும். 

அதாவது, திராவிடர் என்ற சொல்லாடல் கார்டுவெல் கருத்துப்படி, ‘சமஸ்கிருதத்தில் குமாரில பட்டர் எழுதிய ‘தந்திர வர்த்திகா’ விலிருந்து திராவிடர் என்ற இனப் பெயரை எடுத்தேன் என்றார் (பெ.மணியரசன், 2025). அப்படியெனில், சமஸ்கிருத சொல்லாடல் தமிழருக்கு எதற்கு என்ற கருத்து நிலவும். அதிலும், தென்னிந்தியாவை குறிக்கும் அர்த்தத்திலேயே அப்போது திராவிடர் என்று குறிக்கப்பெற்றது. இதில், தெலுங்கு, மலையாளம், கன்னடமும் உண்டு அவர்களையும் குறிக்கப்படும். அதுசரியே என்றால்,  அண்டை மாநிலத்தவர்களும் தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் தங்களை தெலுங்கராகவும், மலையாளியாகவும், கன்னடர்களாகவும் மட்டுமே அறிய விரும்புகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் நம்மை அவர்களோடு இணைத்து திராவிடர் என்று சொல்லி, பழகி வருகிறோம். இதற்கு காரணம், நம்மை ஆண்ட, ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களே என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். இந்தக் காரணத்தாலேயே தனித்து இயங்கும் தன்மைக் கொண்ட தமிழ் பிறரோடு இணைத்து தனது பெருமையை மட்டும் பகிர்ந்துக் கொள்வது ஏன் ? என்ற கேள்வி எழும். 

அதேவேளையில், கடல்சார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் கூற்றுப்படி, ‘திரைமீளர் என்பது ஆழ்கடலில் நீந்தி உயிருடன் வருபவர்களை குறிக்கும் என்றார். அந்த திரைமீளரே பின்னாளில் திரமிலா, டிரமிலா, திராவிடா என்று மருவி வந்ததாக குறிப்பிடுகிறார். இவர், ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களை குறிப்பிடுகிறார். இந்த கணக்குப்படி பார்த்தாலும், தமிழர்களை மட்டுமே குறிக்கிறது. ஆனால், தற்போதைய திராவிடர் தமிழர்களை மட்டுமல்லாது பிறரையும் சேர்த்து குறிப்பிடுகிறது. அதனாலேயே, சமகாலத்திய அரசியல் பார்வையில் தமிழர்களை திராவிடர்கள் என்று குறிப்பிடாமல், தமிழர்களாக குறிக்கப்படுவதே சரியானதாக இருக்கும். 

இதனை இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியா என்பது ஓர் நாடு அல்ல;  பல மாநில பண்பாடுகளை ஒன்றிணைந்த ஓர் துணைக் கண்டம் என்று சொல்வோம். அதுபோல, தென்னிந்தியா 4 மொழிகளை உள்ளடக்கிய மற்றொரு துணைக்கண்டம். இதனை ஒரே சொல்லில் திராவிடம் என்று அழைப்பது அறிவுடமை ஆகாது. இது, இந்தியா ஓர் நாடு என்று அழைப்பதற்கு சமமாகும். ஆகவே, 

இந்திய துணைக் கண்டத்தின் பூகோள அமைப்பைப் பொறுத்து, ஜெர்மனியில் இருந்து வந்தவர்களை ஆரியர் என்றும், தென்னிந்தியாவை சேர்ந்த ஆரியர்களை திராவிடர் என்றும் முற்காலத்தில் சொல்லப்பட்டது. இது, சுமார் 2 ஆயிரம் ஆண்டுகாலக்கட்டத்திய வரலாறு அடிப்படையிலானது. 

ஆனால், அதுவே, கடந்த 100 ஆண்டுகளில், இந்திய துணைக் கண்டத்தை மொழிவாரி மாநிலமாக, பிரிக்கப்பட்டபோது, தென்னிந்திய மக்களை திராவிடர் என்று ஆங்கிலேயர் மூலம் குறிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், நமது சமகாலத்திய கட்டுரைக்கு வரலாம்...

தென்னிந்தியாவை குறிக்கப்பெற்ற நூற்றாண்டுக்கு முந்தைய திராவிடம், உலகையே சுமார் 1000 ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழ் இனத்துடன் தற்போது போட்டியிடுகிறது. இது எப்படி சாத்தியமானது? என்று ஆழ்ந்து சிந்திக்கும் போது,  ‘அரசியல், வியாபாரம், சுயநலம்’ அதற்கான பதில்களாக வருகிறது. 

அதாவது, ஆரியர்களின் வருகைக்கு முன் தமிழர்களின் கடவுளாக இருந்தவர் முருகர். ஆனால், ஆரியர் வருகைக்கு பின் அவரது உடலில் நூல் அணிவித்து பார்ப்பனக் கடவுளாக மாற்றப்பட்டுள்ளார். இது, பண்பாட்டு ஊடாட்டம். 

அதுபோல, தமிழர்களின் வாழ்வியலை திராவிடம் என்ற அரசியல் சொல்லாடல் களவுக் கொண்டால் இதிலும் பண்பாட்டு ஊடாட்டம் நிகழ்ந்துள்ளது. மேலும், பண்பாட்டு திரிபும் அரங்கேறியுள்ளது. ஓர் இனத்தின் சிறப்பை மற்றொரு பெயரில் பிறர் களவாடுவதை சுயநல அரசியல் எனலாம்.அதிலும், 

தமிழர்கள் என்ற தனித்த இனத்தை, பிறரோடு பொறுத்தி, அவர்களைச் சார்ந்து தமிழ் இணைந்து வளர்ந்ததாக கதை கட்டுவது சமகாலத்திய அரசியல் ஆகும். அத்தோடு, பிற மொழியினர் தமிழை புறந்தள்ளி, தங்களை திராவிடர் என்று அறிவிக்காது, தனித்து இயங்கும் போது, தமிழ்நாடு மட்டும் அவர்களை இணைத்து நடக்க வேண்டும் என்று எண்ணுவதே அரசியல்வாதிகளின் கயமைத்தனமாக உள்ளது. 

சமகால உதாரணமாக, தமிழ்நாட்டில் இயங்கும் நடிகர் சங்கம் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்று பிற மாநிலங்களை உள்ளடக்கியது. ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்கு இவ்வாறான பெயர் இல்லை. அவை தனித்து தங்கள் மொழியை, மாநிலத்தை மட்டுமே கொண்டாடுகின்றனர். ஆனால், தமிழர்கள் பிற மொழியை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று உள்ளூர் அரசியல்வாதிகள் நிலைநிறுத்தியுள்ளனர்,    

மேலும், பிறமொழியினர் தங்களின் தனித்த மொழி பெருமை பேசினால் மொழிப் பற்று, மாநிலத்தை பற்றி பேசினால் நிலப்பற்று, தங்கள் குழுவைப் பற்றி பேசினால் இனப்பற்று, ஆனால், அதையே தமிழர்கள் செய்தால் பிரிவினைவாதம். 

இந்தியா என்பது பல தேசியங்களை கொண்டது என்ற அரசியலமைப்பு சட்டத்தில் இருந்தாலும், வரலாற்று ஆவணமாக பல மேற்கோள்கள் கட்டப்பட்டு இருந்தாலும், அதனை ஏற்று ‘தமிழ் தேசியம்’ என்று சொல்லக் கூடாது என்று பலர் கூறுவர். ஏனெனில், அப்படி சொல்வது பிரிவினைவாதம் என்பர். ஏனெனில், தமிழ் தேசியவாதம் வலுபெற்றுவிடும். ஆனால், ‘தெலுங்கு தேசம்’ என்ற மாநிலம் இருப்பதை பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஏனெனில், அதுதான் சமகாலட்திய திராவிட அரசியல்.

தமிழ், தமிழர், தமிழியல் ஆகியவை செழித்தோங்க கூடாதென்றால், தமிழ் தேசிய வாதம் தழைக்க கூடாது. அதற்காக திராவிடர் என்று தமிழர்களிடத்தில் மட்டும் சமகாலத்தில் கட்டாயமாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஏனெனில், இது பலருக்கு அரசியல் அடையாளமாகத் திகழ்வதால், அதனை விட்டு, தமிழை உயர்த்தி பிடிக்க தயங்குகின்றனர். இதில், தயக்கம் என்று சொல்வதை விட, தமிழ் அழிந்தாலும் பரவாயில்லை, தனது சாதியம், தனது ஆதிக்கம் அழியக் கூடாது என்று பிடிவாதமாக இருக்கின்றனர். அதனாலேயே, ‘திராவிடம்தான் தமிழ், தமிழ்தான் திராவிடம்’ என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர். ஏனெனில், இவர்கள் ஐம்பது ஆயிரம் ஆண்டு கால பார்வையில் திராவிடத்தை தமிழோடு ஒப்புமைப்படுத்தவில்லை. நூற்றாண்டில் தென்னிந்தியாவை திராவிடமாக கட்டமைத்துள்ளனர். அதனால், இவ்வாறு கூறுவது தற்போது தவறானதாகும்.

எந்த மொழியின் உதவியின்றியும் தனித்து இயங்கக் கூடிய மொழி தமிழ். அத்தகைய மொழியினர் எந்த மொழியின் ஆதரவு இன்றியும் தனித்து இயங்க முடியாதா ? நிச்சயம் முடியும். இதற்கு தெலுங்கர், மலையாளிகள், கன்னடர்கள் கூட அமைதி கொள்வர். ஆதரவு கரம் நீட்டுவர். ஆனால், திராவிடம் என்ற சொல்லாடலை அரசியலாக்க முயல்பவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில், திராவிடம் என்பது அவர்களின் தற்போது அரசியல் சொல்லாடல், சுயநல சொல்லாடல், இதனை வைத்து அரசியல் (வியாபாரம்) செய்யும் பிழைப்புவாதிகள் எனலாம். 

இதெல்லாம் இருக்கட்டும், திராவிடத்தை ஏற்றுக் கொண்டால் என்ன ஆகப்போகிறது ? என்ற கேள்வி பலருக்கு எழலாம். அதற்கான பதில் ‘திராவிடத்தின் பெயரில் இவர்கள் என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர் (வளர்மெய்யறிவான், 2025) என்கிறார் வளர்மெய்யறிவான். அதன்விளைவாகவே, தமிழர் அல்லாதோர் எந்த அதிகாரத்தில் வந்தாலும், தமிழர்கள் எந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டாலும் கேள்வி கேட்க முடியாத நிலை உருவாகும். ஏனெனில், அவர்கள் பிற மொழியினத்தவராக இருந்தாலும்; அவர்கள் திராவிடர்கள்; நாமும் திராவிடர்கள். இதுவே, தமிழராக குறிக்கப்பெற்றால், தமிழருக்கான இடம் தமிழ்நாட்டில் கிடைத்ததா ? இல்லையா ? என்ற கேள்வி மக்களிடத்தில் எழும். அந்தகைய கேள்விகள் எழக்கூடாது என்றால், திராவிடர் என்ற முகமூடிக்குள் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 

‘தமிழ்நாட்டில் தமிழருக்கு உரிமை வேண்டும்’ என்று  கோரிக்கை வைப்பதே ஓர் விநோதம்தான். ஏனெனில், இம்மாதிரியான கோரிக்கை பிற மாநிலங்களில் வருவது இல்லை. 

சரி, திராவிடத்தை விட்டு, தமிழ், தமிழர் என்ற சொல்லாடல் முன்னிறுத்தினால் என்ன ஆகும்? முதலில் திராவிட சொல்லாடல் வைத்து பிழைப்பு நடத்த முடியாது. அடுத்து, தமிழின் பெருமை சிறுக, சிறுக உலகம் முழுதும் தழைத்தோங்கும். நமது பெருமைகளை திராவிடர் என்ற சொல்லாடல் மூலம் களவாட முடியாது. 

உதாரணமாக சிந்து சமவெளி நாகரீகம் தமிழர் பெருமை. திராவிடர் அல்ல. ஆனால், ஆய்வு நூல்களில் திராவிடர் என்ற சொல்லாடலே பெரும்பாலும் வருகிறது. இது, ஆங்கில அறிஞர்கள் படிக்கும் போது தமிழர்களின் பெருமை பிற மாநில, மொழிக்குசென்று விடுவது எளிதாக நடக்கும். பிற மாநிலத்திற்கு மட்டுமல்லாது, பிற நாட்டிற்கு சில ஆண்டுகளில் மடைமாற்றம் செய்யப்படும். 

ஆகவே, ‘என்னுடைய பெயரை நான் தான் சொல்வேன் என்ற உரிமையை நாம் விட்டுக் கொடுக்க கூடாது’ என்பது உண்மையானால். நான் தமிழன், தமிழியல் எனது வாழ்வியல் என்று நமது உரிமையோடு நம்மை நாம் உலகுக்கு அறிமுகம் செய்வோம். 

திடீரென தமிழ் தேசியம் பேசுகிறார்கள்? இது, அரசியல் லாபத்திற்கு என்று பலர் சொல்லத் தயாராகலாம். இவை, பல ஆண்டு போராட்டம். பல அறிஞர்கள் திராவிடத்தை விடுத்து, தமிழை பல்வேறு காலக்கட்டங்களில் முன் மொழிந்துள்ளனர். குறிப்பாக, “அயோத்திதாசப் பண்டிதர் - தமிழன் என்ற நாளிதழை கொண்டு வந்தார், கி.ஆ.பெ.விசுவநாதம் - ‘தமிழர் கழகம்’ என்ற அமைப்பை தொடங்கினார், ம.பொ.சிவஞானம் மெட்ராஸ் ஸ்டேட்டை தமிழ்நாடு என்று வைக்க போராடினார், சி.பா.ஆதித்தன்னார் - நாம் தமிழர் என்ற கட்சியைத் தொடங்கினார், சோமசுந்தர பாரதியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழக்கமிட்டார், பெருஞ்சித்திரனார் - தமிழ்நாடு விடுதலைப்படை எனும் அமைப்பை தொடங்கினார். (வளர்மெய்யறிவான், 2025). ஆகவே, சமகாலத்திலும் தமிழரை பிற முகமூடி கொண்டு ஏமாற்றுவதை தடுக்கவே தற்போதும் தமிழ் தனக்குத் தானே போராடி வருகிறது. 


                                                                                                  - சுரேஷ் குருபாய் (Tamizhan Stock)


மேற்கோள்கள்

* வளர்மெய்யறிவான் (2025). தமிழ்த் தேசியம் - கேள்வி பதில்கள். கலைஞன் பதிப்பகம்

* மணியரசன்,பெ. (2025).கேள்வி பதில்கள்: கலைஞன் பதிப்பகம்.

Comments

Popular posts from this blog

ராஜீவ்காந்தி கொலை : டாப் சீக்ரெட் என்ன ?

ஈ.வே.ரா “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் பிக்பாஸ்