ஆட்டம் போடுவது யார் : நடிகரா ? ரசிகரா ?
ஆட்டம் போடுவது யார் : நடிகரா ? ரசிகரா ? மனித உடலில் இருந்து இரத்தத்தை பிரித்தெடுத்தால் என்ன நிலை ஆகுமோ ? அதே நிலையை ரசிகரின் மனதில் இருந்து அவரது ரசிப்பை பிரித்தெடுத்தால் ஆகும். அந்த அளவிற்கு மனிதருக்கும், அவரது ரசிப்புக்கும் இடையே மரபு நேசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஆடல், பாடல் இல்லாத ஓர் நிலை உருவானால், இயந்திரத் தனமான சமகாலத்தில், ஒருவர் மற்றொருவரை கொலை செய்யும் அளவிற்கான மன அழுத்தம் உருவாகக் கூடும். மூன்றாம் உலகப் போர் தண்ணீரால் மட்டுமல்ல, ஆடல், பாடல் இல்லாத நிலத்திலும் உருவாகும் என அறிஞர்களால் எச்சரிக்கை விடக் கூடும். தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையை பொறுத்த வரையில் ஆடலும், பாடலும் இன்றி ஓர் அணுவும் அசையாது. ஏனெனில், தமிழ்ச் சமூகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஆடல், பாடல் ஒன்றோடொன்று கலந்துள்ளது. அதிலும், தமிழ் இசைக் கருவிகள் வாழ்வியலோடு தொடர்புடையதாக இருப்பதால் அதற்கான அசைவுகளும் தன்னகத்தே கொண்டு, நடனமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன், தனக்காக வாழ்பவர்களை, தனக்காக தியாகம் செய்பவர்களை, மனதிற்கு மகிழ்ச்சியை தந்து, துன்பம் நீக்குபவர்களை கடவுளாக ப...