ஆட்டம் போடுவது யார் : நடிகரா ? ரசிகரா ?


ஆட்டம் போடுவது யார் : நடிகரா ? ரசிகரா ?


மனித உடலில் இருந்து இரத்தத்தை பிரித்தெடுத்தால் என்ன நிலை ஆகுமோ ? அதே நிலையை ரசிகரின் மனதில் இருந்து அவரது ரசிப்பை பிரித்தெடுத்தால் ஆகும். அந்த அளவிற்கு மனிதருக்கும்,  அவரது ரசிப்புக்கும் இடையே மரபு நேசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஆடல், பாடல் இல்லாத ஓர் நிலை உருவானால், இயந்திரத் தனமான சமகாலத்தில், ஒருவர் மற்றொருவரை கொலை செய்யும் அளவிற்கான மன அழுத்தம் உருவாகக் கூடும். மூன்றாம் உலகப் போர் தண்ணீரால் மட்டுமல்ல, ஆடல், பாடல் இல்லாத நிலத்திலும் உருவாகும் என அறிஞர்களால் எச்சரிக்கை விடக் கூடும்.

தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையை பொறுத்த வரையில் ஆடலும், பாடலும் இன்றி ஓர் அணுவும் அசையாது. ஏனெனில், தமிழ்ச் சமூகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஆடல், பாடல் ஒன்றோடொன்று கலந்துள்ளது. அதிலும், தமிழ் இசைக் கருவிகள் வாழ்வியலோடு தொடர்புடையதாக இருப்பதால் அதற்கான அசைவுகளும் தன்னகத்தே கொண்டு, நடனமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன், தனக்காக வாழ்பவர்களை, தனக்காக தியாகம் செய்பவர்களை, மனதிற்கு மகிழ்ச்சியை தந்து, துன்பம் நீக்குபவர்களை கடவுளாக பார்க்கும் குணமும் மரபு நீதியாகவே நம்மை தொற்றியுள்ளது. அதன் வெளிப்பாடாகவே, குடும்பத்தை காத்தவர்கள் உயிரிழந்தால், அவர்களை கடவுள் (?) படத்திற்கு அருகில் வைத்து வழிபடச் செய்கிறோம். இதன் அடுத்தக் கட்டமாக, மனதின் உள்ளார்ந்த ஆவலை, தேவையை பூர்த்தி செய்பவர்களை, எந்தவித சல்லடையுமின்றி, மனதார ஏற்கும் மனபிழற்சியும், அன்பு வீரியத்தில் எதையும் செய்யும் துணிச்சலும் வருகிறது. 

இதனுடன், நடிகர்களுக்காக, ஓர் ரசிகன் தன்னையே அர்ப்பணிக்க நினைக்கும் மனமும் இயல்பாக ஒன்றிவிடுகிறது.  இந்த மனநிலையில்தான், தமிழ்ச் சமூகத்தில் பலர் மகிழ்வான வாழ்வைத் தேடி, இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அத்துடன், நம்மை காப்பாற்ற வேறொருவரால்தான் முடியும், நமது மகிழ்ச்சி என்பது அடுத்தவரால் உருவாக்கப்படுவது என நினைக்கும் மனப்பான்மையும், புற மனிதர்களை நோக்கி நகர வைக்கிறது. இந்த நிலையில், நம்மை ஏழ்மையில் இருந்து காப்பாற்றும் ஓர் கடவுளை பாமரன் திரையில் கண்டுபிடிக்கிறான். தான் ஆடிப்பாடி மகிழ வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆசையை திரையில் அனுபவிக்கிறான். ஒடுக்குதலை அடித்து ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை திரையில் நிறைவு செய்கிறான். இறுதியில், அத்திரையின் நாயகனை தன் மனதிலேயே குடிஅமர்த்துகிறான். முக்கியமாக, தன் வாழ்நாள் லட்சியக் கனவை சில மணிநேரம் அனுபவிக்க செய்யும் நடிகர்களை கொண்டாட விரும்புகிறான்.  


தமிழ்ச் சமூகம் பேச்சு வழி பண்பாட்டை அடிப்படையாக கொண்டது. எதனையாவது பேசியே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாகவே, பழமொழி, சுலவடை போன்றவை மக்களின் அன்றாட வாழ்வியலில் இருந்துள்ளது. அதன் வெளிப்பாடாக இன்றைய காலக்கட்டத்தில், காட்சி ஊடகத்திலும் பேச்சுக்களே அதிகம் உள்ளது. உதாரணத்திற்கு தொலைக்காட்சி என்பது காட்சி ஊடகம். இதில், காட்சிகளே பெரும்பாலும் இருக்க வேண்டும். ஆனால், பேச்சுகளே அதிகம் உள்ளது. மரபு ரீதியாக பேச்சு வழி வழக்கம் நமக்கு பழக்கப்பட்டு இருப்பதால், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் வெற்றி அடைந்துள்ளது. இதன் இன்னொறு வடிவமாக இருப்பது, ஒருவருக்கொருவர் இரு நடிகர்கள் பற்றி பேசிக் கொள்ளும் பழக்கம். முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளிவரும் நாட்களில் இதன் தாக்கம் அதிகம் வெளிப்படும். 

ஒரு நடிகரின் நடிப்பு பிடிக்கும் என்றால், அதனை திரையில் பார்த்து அது சார்ந்து சிந்திப்பதோடு நிற்கும். ஆனால், அவரது குடும்ப விவரங்கள், புதிய படம் குறித்த சின்ன, சின்ன தகவல்கள், அடுத்தப் படத்தின் சிறப்பம்சங்கள் போன்ற சிறு தகவல்களை கூட தெரிந்துக் கொள்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அதனை மற்றவர்களிடம் பேச வேண்டும் என்பதே. நாம் மற்றவர்களிடம் இதுபற்றி பேச முடியாத சூழல் இருந்தால், நடிகர்களை பற்றிய பயனில்லாத பல தகவல்கள் செய்திகளாக மாறாது. அதனை ரசிகர்களிடம் ஊக்குவிப்பதற்கு அடிப்படை பேச்சு வழிப் பண்பாடே நமது அடித்தளம். இதனை, ஊடகங்களும், நடிகர்களும், நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.


தமிழர்களின் மனம் யாரையும் எளிதில் ஏற்காது. அவ்வாறு ஏற்றுக் கொண்டால், அவர்களின் நலனுக்காகவே தினமும் போராடும். அதன் வெளிப்பாடாகவே, எம்.ஜி.ஆர் இறந்த பின்பும் அவரையே நினைத்துக் கொண்டு, வழிபடும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். இதன் வழித்தோன்றலாக, தனக்கு பிடித்த நடிகர் குறித்த தகவல் ஏதேனும் வந்தால், அதில்,  சரி எது, தவறு எது என்று ஆராயும் முன்பே, நமது நடிகருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்பதையே ரசிகர்களின் ஆழ்மனம் முன்னிறுத்துகிறது. 

தமிழகத்தில் கடந்த கால வரலாற்றில் (எம்ஜிஆர், சிவாஜி), (ரஜினி, கமல்), (அஜித், விஜய்) போன்ற இரு சம போட்டியாளர்கள் இருப்பது அவர்களின் தனி திறன் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. மக்களுக்கு பேச்சு வழக்கம் தொடர்ந்து நிலைக்க, ஓர் ஆவலுடன் கூடிய எதிர் வாதம் இருக்க, இரு சம போட்டியாளர்கள் இருக்க வேண்டியது அவசியம். அதனால், மக்களின் ஆவலே, இரு சம போட்டியாளர்களை உருவாக்குகிறது. இவை, திரைக்கு மட்டுமல்ல, விளையாட்டு, இசை, நடனம், பாடல் போன்ற அனைத்து தளங்களிலும் உருவாக்கும். தமிழ்ச் சமூகம் திரைபடத்துடன் ஒன்றினைந்து உள்ளதால், அதன் வெளிப்பாடு எளிதாக தெரிகிறது. திரைத்துறை சார்ந்த செய்திகள் எது வந்தாலும் உடனே பிரபலம் அடைவதற்கு மக்களின் இத்தகைய குணாதிசயமும், பேச்சு வழி பண்பாடுமே முக்கிய காரணம்.

தமிழர்களின் உணவு பழக்கத்தில் ஆறு சுவை இருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகவே, தமிழ் சமூகம் பல சுவை கொண்ட மசாலா படங்களையே தொடர்ந்து பார்க்க விரும்புகிறது. இதனை, இந்தியாவில் இருக்கும் மசாலா திரைப்படத்திற்கும், ஷேக்ஸ்பியரின்  கதைக்குள் இருக்கும் மசாலா ஒப்புமை குறித்து பேராசிரியர்.ஜோனாதன் கில்ஸ் ஹாரிஸ் மேற்கோள் மூலம் அறியலாம். அதாவது, பேராசிரியர் ஜோனாதன் நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், “இந்திய திரைப்படங்களில் மசாலா திரைப்படம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவில், தளத்தில் தொடர்பு கொண்டது அல்ல. அவை, பல்வேறு தளங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது” என்கிறார். அதாவது, “ஒரு தொடக்கப் பாடல், ஒரு சண்டை, ஒரு அழுகை, ஒரு குத்து நடனம், ஒரு காமெடி போன்றதோடு மட்டும் மசாலா திரைப்படம் என்பது அமையவில்லை. பாடல் வரிகளும் பல்வேறு மொழி கலப்பாக இருக்கும், திரைக் கதாப்பாத்திரங்கள் இந்து, முஸ்லீம், கிறிஸ்த்து கொண்ட பல்வேறு மதம், இனம், சமயம் சார்ந்த கலப்பாக இருக்கும், இசை என்பதும் பல்வேறு கலப்பாக கொண்டு இருக்கும். இந்திய திரைப்படங்கள் ஒன்றை வரையறையுடன் அமையவில்லை என்பதாக கூறினார். இது, “ஷேக்ஸ்பியரின் நாடக வசனங்களின் வார்த்தை ஒலி அமைப்பு ஒரே மாதிரியாக கொண்டு இருந்தாலும், பல அர்த்தங்களை கொண்டு இருப்பது போன்றது” என்றார். இதன் மூலம், மசாலா திரைப்படம் என்பது நம்மை அறியாமல், நம்மை கவரக் கூடிய பன்மை தன்மை மீதான ஈர்ப்பு. அவை மரபு ரீதியில் இன்னும் தன்னகத்தே கொண்டுள்ளோம் என்பதை அறியலாம். 


இதனை, மையமாக கொண்டே, முன்னணி நட்சத்திரங்கள் பலர் பல கலப்பு கொண்ட திரைப்படங்களை கொடுத்து, ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். ஆனால், ரசிகர்கள் தங்களுக்கு மசாலா திரைப்படம் ஏன் பிடிக்கிறது என்று பெரும்பாலும் அறியாமலேயே மசாலா திரைப்படங்களை ரசித்து வருகின்றனர்.  ஒரு வேளை இது குறித்து கடை நிலை ரசிகருக்கு தெரியவந்தால், அவர்களின் பார்வை விசாலமடைவதுடன், திரைப்படங்களை மாற்று பார்வையில் சிந்திப்பர். அத்தகைய சிந்தனைகள் வராமல் இருக்க, மசாலா திரைப்படங்களே தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நடிகரையும், ரசிகரையும் உணர்வு ரீதியில் ஒன்றிணைக்கும் வகையில் பாடல் வரிகள், காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், ரசிகனின் மனதில் இருந்து, அவனது கண்ணோட்டத்தில், முன்னணி கதாநாயகர்களின் அனைத்து திரைப்படங்களின் வெளியீட்டு நிகழ்வுகளை பார்க்கும்போது, திரையரங்கின் முதல் நாள் நிகழ்வுகள் நகரத்து திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஏனெனில், கிராமங்களில் கோயில் திருவிழாக்களின்போது உறவினர்கள் ஒன்று கூடி பேசுவர், நகரத்தில் திரைப்படம் வெளியிடும்போது, ரசிகர்கள் திடீர் உறவினராக கொண்டு ஒன்று கூடி பேசுவர். முக்கியமாக, கோயில் திருவிழாவின்போது உறவினர்கள் தங்களுக்குள்ளான கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வாழ்வு குறித்து ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து பகிர்ந்துக் கொள்வர். அதேபோல், நடிகரின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால திரைப்படம் குறித்த கருத்துக்களை ஒருவருக்கொருவர் பகிருதல் இயல்பாக நடக்கும். 

மேலும், உறவினர்கள் மத்தியில் பெரும்பாலானோர் தன் மகன் விளையாட்டில் கெட்டிக்காரன், தன் மகள் படிப்பில் சிறந்தவள் என்று மற்றவர்களுடன் ஒப்பிட்டு, சுயப் புகழ் பாடுதல் இருப்பதுபோன்று, மற்ற நடிகர்களை ஒப்பிட்டு, தனக்கு பிடித்த நடிகர் பற்றிய சுயப்புகழ் பாடுதல் அரங்கேறும். திருவிழாக்கென புத்தாடைகள் அணிவது, சாமிபோன்று வேடமிட்டு வருவது போன்று, திரைப்படங்களை காண பிரத்தேக ஆடைகளும், நடிகர்களை போன்ற ஒப்பனையும் செய்யும் வழக்கம் மிகச் சாதாரணமாக நடக்கும். அம்மாதிரியான நிகழ்வே, நடிகர்களான ரஜினிகாந்த் நடித்த “பேட்ட”, அஜீத் குமார் நடித்த “விஸ்வாசம்” போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்ட திரையரங்கிலும் நடந்துள்ளது.  மக்களுக்கு ரஜினி, அஜித் ஆகியோர் நடிகர்கள். ஆனால், ரசிகர்களுக்கு அவ்வாறு இல்லை. தமிழகம் முழுவதும் திறந்த வெளியில் (Out Door) நடிகர்களை  கொண்டாடுபவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவே உள்ளனர். அதிலும், இரண்டாம் தர, மூன்றாம் தர திரையரங்கில் அதன் வீச்சை அதிகம் காணலாம். 

சென்னையில் இரண்டாம் தர திரையரங்காக இருக்கும் பல திரையரங்கில், முன்னணி நடிகர்களின் திரைப்படம் திரையிடப்படும்போதெல்லாம், ரசிகர்கள் தங்களின் நடிகரை கடவுளாக நினைத்து போற்றும் நிகழ்வுகளை எளிதாக காணலாம். வடசென்னையின் பெரம்பூர் பகுதியில்  “ஸ்ரீ பிருந்தா” திரையரங்கில் இதன் வெளிப்பாட்டை எளிதாக காணலாம்.


ரசிகனுக்கும், நடிகனுக்கும் இடையிலான உறவு சகோதரத்தை மிஞ்சி, கடவுள், பக்தன் என்ற நிலைக்கு மாறுவதற்கு “ரசிகன் தன்னை திரையில் பார்ப்பதே அடித்தளம்”. பாமர ரசிகர் இதனை தனது மகிழ்ச்சியாக கொண்டுள்ளார். அதன் வெளிப்பாடாகவே,  நடிகர்களுக்கு கோயில் கட்டுவது, கட் -அவுட் வைப்பது, பேனர் வைப்பது, பால் ஊற்றுவது, கொடி நடுவது போன்ற பல செயல்களை அறை மயக்கத்தில் செய்து வருகிறார்கள். ஆனால், இது அனைத்தும் அறிந்த நடிகர்கள் எதுவும் அறியாதது போல் இருந்து, ரசிகர்களை சிந்திக்க விடாமல், அவர்களின் மகிழ்ச்சி அவர்களால் உருவானது அல்ல, அவர்களால் உருவாகவும் கூடாது, தன்னால்தான் உருவானது என்ற போலி பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். இதனால், கடைநிலை மனிதர்களே பெரும்பாலும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். தான் ஓர் பெரிய தவறை செய்கிறோம் என்பதை ரசிகர் உணரும் நேரம் விரைவில் வரும். காலம் அதற்கேற்ப தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும். ஆனால், அக்காலத்தை விரைவில் வர விடாமல், சில பெரு நிறுவனங்களும், இயக்குனர்களும் செய்து வருகின்றனர்.  இவர்கள் திரைக்கலையை ஏமாற்றுவதுடன், நடிகரின் பக்தன் என்னும் அப்பாவி ரசிகனையும் ஏமாற்றி வருகின்றனர். இதன் மூலம், முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகும்போது, ஆட்டம் போடுவது ரசிகனாக இருந்தாலும், அவர்களை ஆட்டம் போட வைத்து ஆட்டம்போடுவது நடிகர்களும், நிறுவனங்களும், இயக்குனர்களுமே என அறியலாம்.

- சுரேஷ் குருபாய்


குறிப்பு : ( நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத் குமார் போன்றோரின் திரைப்படப் பெயர்கள் உதாரணத்திற்காக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளவே தவிர, மற்ற முன்னணி நடிகர்கள், நடிகைகள் திரைப்படங்களும் இதில் அடங்கும் )


Comments

Popular posts from this blog

ராஜீவ்காந்தி கொலை : டாப் சீக்ரெட் என்ன ?

திராவிடர்கள் Vs தமிழர்கள்

ஈ.வே.ரா “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் பிக்பாஸ்