டெல்லி போராட்டச் செய்திகள்: பாமர மக்களுக்கு சில டிப்ஸ்...
டெல்லி போராட்டச் செய்திகள்: பாமர மக்களுக்கு சில டிப்ஸ்...
சமூகத்தில் அசம்பாவிதங்கள் நிகழும்போது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த போலிச் செய்திகள் விஷமத்தனமாக பரப்பப்படும். டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நியாயமான முறையில் நடந்தாலும் அதனை கலவரமாக மாற்றி, தங்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் அதிகளவில் நடைபெறும். குறிப்பாக, ஊடகங்கள் மூலம் மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான போலிச் செய்திகள் வெகுவாக பரப்பப்படும். பாமர மக்கள் அதனை எளிதாக ஏற்கும் நிலைக்கு தள்ளப்படுவர். எனவே, செய்தியை வாசிக்கும்போது சற்று நிதானமாக, கலப்படச் செய்தியில் இருந்து தூயச் செய்தியை பிரித்தெடுக்க பாமர மக்கள் அறிவது அவசியம். ஆதலால், செய்திகளை வாசிக்கும்போது கீழே காணும் சில முக்கிய அம்சங்களை வாசகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
உண்மைச் செய்திகளை கண்டறிவதற்கான சில டிப்ஸ் இதோ...
* செய்தியின் தலைப்பை மட்டும் வைத்து செய்தியின் சாரம்சம் இதுதான் என்று முடிவுக்கு வரக் கூடாது. செய்தியை முழுவதுமாக படித்து அதன்பின் சிந்திக்க வேண்டும்.
* “இது குறித்து கூட்டத்தில் ஒருவர் கூறியதாவது...” என்று வரும் கருத்துக்களை நம்ப வேண்டாம். யார் கூறியது, அவரின் பொறுப்பு என்ன என்பதை அறிய வேண்டும். ஏதேனும் அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தால், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தலைவர் கூறுவதை வாசிக்கலாம். ஆனால், குறிப்பிட்டு சொல்ல முடியாமல், பொத்தாம் பொதுவாக “இது குறித்து ஒருவர் கூறுகையில்...” என்று வரும் கருத்துக்களை ஏற்க வேண்டாம்.
*செய்தியின் தலைப்பானது, சுவாரஸ்யம், பரபரப்பு ஆகியவற்றை மையப்படுத்தி அமைக்கப்படும். ஆதலால், அதற்கு ஆட்படாமல், செய்தியின் கடைசி கருத்துவரை அலச வேண்டும். செய்தியின் தலைப்பை புறந்தள்ளுவது நலம்.
*பிரபலமானவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை இல்லை. துறை வல்லுநர்கள் சொல்வதே பெரும்பாலும் உண்மையாக இருக்கும். ஆதலால், பிரபலமானவர் என்ற ஒற்றை காரணத்திற்காக அவர்களின் கருத்தை மனதில் பதிய வைக்க வேண்டாம். உதாரணமாக, பொருளாதாரத்திற்கு பொருளியல் படித்த வல்லுநர்களின் கருத்தை வாசிக்கலாம், அரசியல் என்றால் அவர்களின் கட்சி கொள்கையை வைத்து அவரை அடையாளம் காணலாம். மாறாக, செய்தி படிக்கும்போது, தமது கதாநாயகன், கதாநாயகி என்பதை தூக்கி ஓரம் வைக்க வேண்டும்.
*குழப்பவாதிகளின் கருத்தை புறக்கணிக்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் ஒரு பிரச்சனை குறித்து ஏதேனும் கருத்து சொன்னால், அவை பிரச்சணைக்கு தீர்வு தருபவையாக இருக்க வேண்டும். மாறாக, தன் சார்பு நலன் கருதி கூறும் எந்த கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டாம்.
*செய்தி வெளியிடப்படும் ஊடகத்தின் பின்புலம் அறிவது அவசியம். ஏனெனில், இதழியல் நெறியை மீறி ஊடகத்தின் முதலாளி சொல்வதே கட்டளை என்பதை ஏற்று, அதற்கேற்ப செயல்படும் ஊடகம் சமகாலத்தில் அதிகம். ஆதலால், அதனைச் சார்ந்தே சமகால இதழியல் செய்தியை புரிந்துக் கொள்ள வேண்டும்.
*அதிகமாக பகிரப்படுகிறது என்பதால் அவை உண்மைச் செய்தியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல செய்திகளை தேடிப்பிடித்து படிக்க வேண்டும். உங்களைத் தேடி செய்தி வந்தால் அவை பெரும்பாலும் ஆக்கப்பூர்வமான செய்தியாக இருக்காது என்பதை நம்பலாம்.
*ஓர் செய்தி 50 சதவிகிதமாவது உண்மைத் தன்மையுடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, அச்செய்தியை நான்கு செய்தித்தாள்களில் அல்லது நான்கு செய்தி சேனல்களை பார்த்து ஒப்பிட்டு அறிய வேண்டும்.
*ஓர் குறிப்பிட்ட செய்திக்கு முக்கியத்துவம் (பத்திரிகை எனில் அதிக பக்கம், சேனல் எனில் அதிக நேரம்) கொடுக்கப்படுகிறது எனில், ஏன் ?, எதற்காக ?, யாருக்காக ? என்பதை யோசிக்க வேண்டும். குறிப்பாக, அச்செய்தியில் இருக்கும் வார்த்தை பயன்பாடு மக்கள் நலன் சார் தன்மையுடன் இருக்கிறதா ? , சுய நலன் சார் தன்மையுடன் இருக்கிறதா ?, சித்தரித்து வெளியிடப்படுகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
*எல்லாவற்றிற்கும் மேலாக பகுத்தறிவுடன் செய்தியை பகுத்து அறியும் தன்மையை வளர்க்க வேண்டும்.
-சுரேஷ் குருபாய்

Comments
Post a Comment