தத்துவ அறிஞர்களின் பார்வையில் வைரவன் குப்பத்தின் பண்பாடு ஊடாட்டம்
தத்துவ அறிஞர்களின் பார்வையில் வைரவன் குப்பத்தின் பண்பாடு ஊடாட்டம்
அறிமுகம் :
சென்னையை அடுத்துள்ள பழவேற்காடு பகுதியானது நெய்தல் திணை கொண்ட நிலப்பரப்பு. ஒவ்வொரு இடத்திற்கும் ஓர் வாழ்வியல் சூழல் இருப்பதுபோன்று, கடல் சார்ந்த இப்பகுதியில் மீனவர்களின் வாழ்க்கைச் சூழல் கடலுடன் இயைந்து காணப்படுகிறது. ஆனால், ஐந்திணைகளில் எதுவாக இருந்தாலும், உலகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரீக முன்னேற்றம் என்ற பெயரில் செய்யப்படும் வர்த்தக பரிமாற்றங்களால், பல பண்பாடு மாற்றங்கள் அன்றாடம் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன. இதனை, ஒரீரு நாட்களை அடிப்படையாக கொண்டு வாழ்வியல் மாற்றங்களை விளக்க முடியாது. ஆனால், நெய்தல் குடிகள் வாழ்வில் ஓர் குறிப்பிட்ட கால அளவில் ஏற்பட்டுள்ள பண்பாடு ஊடாட்டங்களை எளிதாக காணலாம். அந்த வகையில், வைரவன் குப்பத்தின் வெளிசார் வாழ்வியலில் பல மாற்றங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக, வழிபாட்டு தளம், ஒப்பனைத் தன்மை, மரபு சார் அழகியல் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள ஊடாட்ட பண்புகளை எளிதாக காணலாம். இதனை, ஆய்வுப் பார்வையில் தற்போது காணலாம்.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெர்டினண்ட் டோன்னில் (Ferdinand Tonnies)என்ற சமூகவியல் அறிஞர் சமூகத்தை இரு குழுவாக பிரிக்கிறார். ஒன்று ஜெமியன்சாப்ட் ( Gemeinschaft), இரண்டாவது ஜெஸல்சாப்ட் (Gasellschaft). இதனை, மூன்று அளவீடுகள் மூலம் உறுதிப்படுத்துகிறார். அவை 1. வகைப்படுத்தல் (Setup), 2. உறவு (Relationship), 3. முன்னெடுப்பு (Will). அதாவது, வகைப்படுத்தல் என்பது நகர / கிராம இணைப்பையும், உறவு என்பதை பழக்க வழக்க இணைப்பையும், முன்னெடுப்பு என்பதை இலக்கு அல்லது அடுத்த நிலை நோக்கிய பார்வையை முன்வைப்பதையும் பொறுத்து உறுதிப்படுத்துகிறார்.
கனடாவை சேர்ந்த ஜேம்ஸ் டியூலி (James Tully) என்ற தத்துவ அறிஞரின் வளர்ச்சி (Progress)என்ற கருத்தாக்கம், “வளர்ச்சி என்பது ஒடுக்குதலுக்கான மொழி, வளர்ச்சியில், ஒடுக்கப்பட்டது எது, வீழ்ச்சி அடைந்தது எது, இழக்கப்பட்டது எது ? என்ற கேள்விகள் வளர்ச்சி என்ற வார்த்தையுடன் இணைந்தே வந்துள்ளது” என்று வரையறுத்துள்ளார்.
பிரெஞ்ச் தத்துவ அறிஞர் ஹென்றி லெஃபாப்ரே (Henri Lefebvre) சமூக வெளி உருவாக்கம் (Production of Space) என்ற கருத்தாக்கத்தின்படி, வெளியானது பல வகையாக கட்டமைக்கபடுகிறது. அதாவது, பௌதீக இடம் (தனித்தன்மை வாய்ந்த வெளி) சமூக உருவாக்கத்தின் மூலம் வேறுபட்ட சிக்கலான இடமாக உருவாகி சமூக வெளியாக மாறுகிறது என்கிறார்.
ஆய்வுச் சுருக்கம் :
சென்னைப் பல்கலைக்கழகம், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை “மக்களுக்கான இதழியல்” (Journalism for people) என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு மக்களுக்கான களப்பணியை செய்து வருகிறது. குறிப்பாக, இதழியல் யாருக்கு பயன்பட வேண்டுமோ ? அவர்களை சென்றடைய வேண்டும் என்பதை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதாவது, மக்களுக்கான இதழியல் என்பது பாமர மக்களுக்கான குரலாகவும், அடித்தட்டு மக்களின் நிலையை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டும் செயலாகவும், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையை அடுத்துள்ள பழவேற்காடு, வைரவன் குப்பத்தில் குழந்தைகளின் தனித்திறன் மேம்படுத்தும் களப்பணி செய்யப்பட்டது. இச்சமயத்தில், வைரவன் குப்பம் “நகரை நோக்கி வரும் கிராமம்” என்ற அளவில் பல பண்பாட்டு மாற்றம் குறித்து ஆய்வு அடிப்படைகள் அறியப்பட்டது. அதனால், சமூகவியல் அறிஞர் டோன்னிஸ் (Ferdinand Tonnies (1855–1936)) என்பவரின் ஜெமியன்சாப்ட் (Gemeinschaft), ஜெஸல்சாப்ட் (Gasellschaft) என்ற கருத்தாக்கத்தின்படி, சமூக கூறுகளை வகைப்படுத்துதல் என்ற அளவீட்டில், பிரெஞ்ச் அறிஞர் லெஃபாப்ரே அவர்களின் சமூக வெளி உருவாக்கம் (Production of Space, 1974) என்ற கருத்தாக்கத்தையும், கனடாவை சேர்ந்த ஜேம்ஸ் டியூலியின் வளர்ச்சி (Progress) என்ற கருத்தாக்கத்தையும் கொண்டு வைரவன் குப்பம் பண்பாடு ஊடாட்டம் அறியப்படுகிறது. இதற்காக, பழவேற்காடு, வைரவன் குப்பம் பகுதியின் மீனவ மக்களை மாதிரிகளாக (Samples)கொண்டு, சமயம், மரபு, பழக்க வழக்கத்தின் பண்பாடு முறைமை குறித்த கேள்விகளை ஆழ்ந்த நேர்காணல் (In depth Interview) அடிப்படையில், இனவரையியல் (Ethnography)முறையில் கேள்விகள் கேட்கப்பட்டு, கிடைக்கப்பெற்ற பதில்களை தகவல்களாக கொண்டு, சமூகவியல், தத்துவவியல் அறிஞர்களின் கருத்தாக்கங்களோடு ஒப்பீடு செய்து, பகுப்பாய்வுக்கு (Analysis) உட்படுத்தி, வைரவன் குப்பத்தின் பண்பாடு ஊடாட்டம் (Culture interaction) அறியப்படுகிறது.
கோயில்:
(வைரவன் குப்பத்தில் உள்ள பெரியபாளையத்து அம்மன் ஆலயம்)
ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெர்டினண்ட் டோன்னிஸ் (Ferdinand Tonnies) என்ற தத்துவ அறிஞரின் கருத்தாக்கத்தின் படி, ஜெஸல்சாப்ட் (Gesselschaft) (தனி நபர் சாராத வலுவான சமூக/குழு உறவுகள்) நகரத்தில் இருக்கும் வெளி சாராத, வளையத்தில் கொண்டு வரப்பட்ட கோயிலும், ஜெமியன்சாப்ட் (Gemeinschaft)(நெருக்கமான/வலுவான தனி நபர் குடும்ப சமூக உறவுகள்) வரையறையின்படி, கிராமத்தில் வெளிசார்ந்த நிலையில், மண்ணை புனிதமாக கொண்டு திறந்த வெளியில் கோயில் வழிபாடு கொண்டிருப்பது. அதாவது. கெமின்சாப்ட் என்ற வரையரையில் கிராமத்தின் சமய வழிபாடு திறந்த வெளியிலும் (கிடா வெட்டுதல், அலகு குத்துதல், தீ மிதித்தல் ), விளையாட்டுகள் திறந்த வெளியிலும் (பப்பரம், கோலி, பாண்டி, கபடி ), தொழில் திறந்த வெளியிலும் (உழவு, ஆடு, மாடு மேய்த்தல், சந்தை படுத்துதல்), வெளி அரங்கிலும் நடைபெறும். ஜெஸல்சாப்ட் (Gesselschaft) நகரத்தில் மண் புனிதமாக கொள்ளாமல், இடைவெளி விட்டு, பெரும்பாலும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு, தரை, மேற்கூரை கொண்டு ஓர் வட்டத்திற்குள் சமய வழிபாடுகளும், விளையாட்டுகள் உள் அரங்கிலும் (கேரம், செஸ், டென்னிஸ்) தொழில் முறையானது பெரும்பாலும் அடுக்குமாடிகளில் ஓர் அறையுடன், தரை, மேற்கூரை அமைத்து, இயற்கை காற்றை மறைத்து, குளிர்சாதன காற்றை பெற்று உள் அரங்கில் நடைபெறும். இதில், வைரவன் குப்பத்தின் எல்லை ஓரம் ஜெமியன்சாப்ட் (Gemeinschaft)(நெருக்கமான/வலுவான தனி நபர் குடும்ப சமூக உறவுகள்) வரையறையின்படி பாளையத்து அம்மன் கோயில் இருந்தது.
அதாவது, பேபியம்மா (50) என்பவர் கூறியதில் “பெரியபாளையத்து அம்மன் ஆலயம் 40 ஆண்டுகளுக்கு முன்பு பவானி அம்மன் ஆலயம் என பெயர் கொண்டிருந்தது. பின்னர் நன்கொடை மூலம் கோபுரம் இரும்பு கட்டுமானம் மூலம் கட்டப்பட்டுள்ளது. ” ஆனால், வைரவன் குப்பம் மீனவ கிராமத்தின் பாளையத்து அம்மன் கோயில், பண்பாடு ஊடாட்ட காரணங்களால், வெளி அரங்கில் அமைந்திருக்கும் கோயிலுக்கு உள், இரும்பு வேலியானது ஓர் உள் அரங்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், டோன்னில் அறிஞரின் ஜெமியன்சாப்ட் என்ற கிராம நிலையில், பண்பாடு ஊடாட்டம் உருவாகி, நகரத்தின் கெசில்சாப்ட் என்ற நிலையில் உள் அரங்கு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
பேபியம்மா என்பவர் கூறியதில் “பெரியபாளையத்து அம்மன் ஆலயம் 40 ஆண்டுகளுக்கு முன்பு பவானி அம்மன் ஆலயம் என பெயர் கொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து, சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் நன்கொடை கொண்டு, கோயிலை புதுப்பித்து உள்ளனர். அப்போது, கட்டப்பட்டதே அந்த இரும்பு வேலி. முன்பு, வேலி எதுவும் கிடையாது. திறந்த வெளியில் இருக்கும். அப்போது, பொங்கல் வைப்பதும், விழா நடத்துவதும், பூஜை செய்வது அனைத்தும் வெளியில்தான் நடக்கும்” என்றார். வெளி சார்ந்த இடத்தில், வெளிசார்ந்து இருக்க வேண்டிய கோயில், பாதுகாப்பு என்ற பெயரில் இரும்பு வேலி கொண்டு, பண்பாடு ஊடாட்டம் உருவாகியுள்ளது. இதனால், கிராமத்தில் மண்ணை புனிதமாக கொள்ளும், வெளியை அடைப்படையாக கொண்டு இருக்கும், திறந்த வெளி கோயில் தனது பண்பாட்டு இயல்புகளை இழந்து, சுயத்தை இழந்து, ஊடாட்ட இயல்புகள் கொண்டு அமைந்துள்ளது. இதனால், கோயில் என்பது ஓர் வட்டத்திற்கு உட்பட்டது, இரும்பு வளையத்துக்கு உள் இருப்பது என்ற நிலையில், கெசில்சாப் நிலையை அடைகிறது. இதன் காரணமாக, மண்ணுக்கும் மக்களுக்குமான உறவு, மக்களுக்கும் கோயிலுக்குமான உறவு என்ற பிரிவினை உண்டாக்கப்பட்டு, மண் புனிதமாக கருதப்பட்ட நிலையில், மண் என்பது கோயிலில் படுவது புனிதம் அல்ல என்ற அளவில், மனிதர்கள் அதனோடு உறவாடுவது கூடாது என்ற மரவு வழிக்கு எதிரான நிலைப்பாட்டை மறைமுகமாக உணர்த்துகிறது. இதன் விளைவுகள், வேலிக்கு வெளியே இருப்பவர்கள், வேலிக்கு உள் இருப்பவர்கள் என்ற நிலையை எதிர்காலத்தில் உருவாக்கும், குறிப்பாக, இரும்பு வேலியுடன், வைதீகம் பண்பாடு ஊடாட்டத்தில் அதிகரித்தால், வர்க்க ரீதியில், சாதிய ரீதியில், உயர்தினை, அஃறினை என்ற பிளவுகளை உருவாக்கும் நிலை ஏற்படலாம்.
கனடாவை சேர்ந்த ஜேம்ஸ் டியூலி (James Tully 1946) என்ற தத்துவ அறிஞரின் “வளர்ச்சி என்பது ஒடுக்குதலுக்கான மொழி” வளர்ச்சி (Progress) என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டு இதனை காணும் போது, கோயில் கட்டுமானம் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்துள்ளது எனக் கொள்ளலாம். ஆனால், ஜேம்ஸ் டியூலியின் வளர்ச்சி (Progress) என்ற கருத்தாக்கத்தின் படி, “கோயில் கட்டுமான வளர்ச்சியில், ஒடுக்கப்பட்டது எது ?, வீழ்ச்சி அடைந்தது எது ?, இழக்கப்பட்டது எது ? என்ற கேள்விகள் வளர்ச்சி என்ற வார்த்தையுடன் இணைந்தே வந்துள்ளது”. அதனை அடிப்படையாக கொண்டு, கோயிலின் உள் அரங்க கட்டுமானம் வளர்ச்சி காரணமாக, ஊரைச் சுற்றி, திரிந்து, கோயிலில் ஓய்வு எடுக்கும் ஆடுகள் உள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கோயிலின் உள்ளே இருந்து கொண்டிருந்த ஆடுகள் தீட்டு என்ற பெயரில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆடுகள், மனிதர்கள், கடவுள் என்ற சங்கமம் உடைத்தெறியப்பட்டு, மறைமுகமாக உயர்தினை, அஃறினை என்ற பாகுபாடு எழுந்து, கோயில் உள் மனிதர்கள், கோயில் வெளியே விலங்குகள் என்ற நிலையில் மனிதர்கள், விலங்குகள் இடையிலான உறவு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக, கிராமத்தில், ஜெமியன்சாப்ட் என்ற கருத்தாக்கத்தின்படி, திறந்த வெளி பண்பாடு, நாகரீகம் என்ற பெயரிலான பண்பாடு ஊடாட்ட முறையில் “உள் இருக்கும், வெளி பண்பாடாக” மாறி, திறந்த வெளி பண்பாடு இழக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்ச் தத்துவ அறிஞர் ஹென்றி லெஃபாப்ரேயின் (Henri Lefebvre) சமூக வெளி உருவாக்கம் (Production of Space) என்ற கருத்தாக்கத்தின்படி வெளியானது பல வகையாக கட்டமைக்கபடுகிறது. அதாவது, பௌதீக இடம் (தனித்தன்மை வாய்ந்த வெளி) சமூக உருவாக்கத்தின் மூலம் வேறுபட்ட சிக்கலான இடமாக உருவாகி, சமூக வெளியாக மாறுகிறது என்கிறார். அதன்படி, கோயில் கோபுரத்தை சுற்றி இருக்கும் இரும்பு கம்பிலான கட்டுமானம் பெளதீக இடம், தனித்தன்மை வாய்ந்த இடம் என்ற அளவில் உருவாகியுள்ளது. இதில், பக்தர்களை தவிர ஆடுகள், கோழிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால்,
கோயில் சுற்றுச் சுவர் உள் மனிதர்கள், ஆடுகள், கோழிகள் ஆகியவற்றிற்கு அனுமதி உண்டு. இவை, தொன்றுதொட்ட பழக்க வழக்கங்களால் சமூக வெளியாக நீடித்து வருகிறது. அதாவது, கோயில் இரண்டு அடுக்குகளால் ஆனது. ஒன்று கோயில் சுற்றுச் சுவர், மற்றொன்று கோயில் கோபுரத்தை சுற்றி இருக்கும் இரும்பு கட்டுமானம். இதில், கோயில் கோபுரத்தை சுற்றி இருக்கும் இரும்பு கட்டுமானம் மூலம் செய்யப்பட்ட பெளதீக வெளி பக்தர்களுக்காகவும், இரும்பு கட்டுமானத்திற்கு வெளியே, கோயில் சுற்றுச் சுவர் உள்ளே மனிதர்கள், ஆடுகள், கோழிகள் ஆகியவை பழக்க வழக்கங்களால் சமூக வெளியாகவும் கொண்டு கோயில் என்ற பொது வெளியில் அமைந்துள்ளது. இதனால், கோயில் தனித்தன்மை வாய்ந்த வெளியாகவும், சமூக வெளியாகவும் கொண்டு சிக்கலான இடமாக உருவாகி சமூக வெளியாக உள்ளது.
கோயில் சுற்றி சுற்றுச் சுவர் இல்லாத சமயத்தில் முழு சமூக வெளியாக இருந்த இடம், சுற்றுச் சுவர் மூலம் தனித்தன்மை வாய்ந்த வெளியாக இருந்தது. கோயில் வெளியேயும், கோயில் உள்ளேயும் சிக்கலான சமூக வெளி உருவாகியிருந்தது (கோயில் சுவர் இருந்த காரணத்தால்). பின்னர், கோயில் உள் கோபுரத்தை சுற்றி இரும்பு கட்டுமான செய்யப்பட்டதால், கோயில் சுற்றுச் சுவர் உள் சமூக வெளியாகவும் (மக்கள், ஆடுகள், கோழிகள் ஒன்றாக இருப்பதால்) இரும்பு கட்டுமானம் உள் தனித்தன்மை வாய்ந்த வெளியாகவும் (மக்களை தவிர ஆடுகள், கோழிகளுக்கு அனுமதி இல்லாததால்) இருந்து சிக்கலான சமூக வெளியை உருவாக்கியுள்ளது. கோயிலின் இத்தகைய சிக்கலான வெளி ஹென்றி லெஃபாப்ரேயின் சமூக வெளி உருவாக்கம் என்ற கருத்தாக்கத்தின்படி, சிக்கலான வெளி சமூக வெளியாக மாறும் என நம்பப்படுகிறது. அதாவது, கோயில் சமூக வெளியாக இருந்தபோது, சுற்றுச் சுவர் தடை பட்டபோதும், பழக்க வழக்க காரணத்தால் ஆடுகள், கோழிகள் மீண்டும் மக்களை சென்றடைந்ததும், மக்கள் ஆடுகள், கோழிகளுக்கு இடம் கொடுத்ததும் பழக்க வழக்கத்தால் நிகழ்ந்ததுபோல், இரும்பு கட்டுமானம் உள்ளும் பழக்க வழக்க காரணமாக தனித்தன்மை வாய்ந்த வெளி மீண்டும் சமூக வெளியாக மாறும் என்கிறார். அவ்வாறு, பெளதீக வெளி சமூக வெளியாக மாறும் வரையில் சிக்கலான வெளியாக இருக்கும் என்பது அவரது கருத்தாக்கம் மூலம் அறியப்படுகிறது.
இந்த சிக்கலான வெளியினால் மக்கள், ஆடுகள், கோழிகள் ஆகியவை பண்பாடு வாழ்வியலும் சிக்கலாக அமைந்துள்ளதை அறியலாம். அத்துடன், பெளதீக வெளி மக்களின் பழக்க வழக்கங்களினால் சமூக வெளியாக மீண்டும் உருவாவது என்ற நடைமுறையில், பல பண்பாடு ஊடாட்டங்கள் ஏற்படும் என்பதை ஜேம்ஸ் டியூலியின் வளர்ச்சி (Progress)என்ற கருத்தாக்கத்தின்படி கோயில் சுற்றுச் சுவர், இரும்பு கட்டுமானம் போன்ற வளர்ச்சியுடன், அதனால், இழந்தது, ஒடுக்கப்பட்டதும் இருக்கும் என்பது கண்கூடு. அதாவது, பண்பாடு ஊடாட்டத்தில் அதிகரித்தால், வர்க்க ரீதியில், சாதிய ரீதியில், உயர்தினை, அஃறினை என்ற பிளவுகளை உருவாக்கும் நிலை ஏற்படலாம்.
( இரசாயணம் சாணம் பவுடர் தெளிக்கப்பட்ட வீட்டின் வாசல் )
ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெர்டினண்ட் டோன்னிஸ் (Ferdinand Tonnies) என்ற தத்துவ அறிஞரின் ஜெமியன்சாப்ட் (Gemeinschaft) என்ற கருத்தாக்கத்தின் படி, கிராமத்தில் இருக்கும் பழமை பழக்க வழக்கங்களில் ஒன்று வீட்டின் வெளியே சாணம் தெளித்தல். டோன்னிஸ் அறிஞரின் வெளி சார்ந்த பார்வைக்கு இவை அச்சாரமூட்டுகிறது. மக்கள் தங்களின் வாழ்வியல் சார்ந்து, பூச்சிகள், நோய் கிருமிகள் வீட்டினுள் வராமல் தடுக்க, நோய் கிருமி எதிர்ப்பு கருவியாக சாணம் தெளித்து, பழக்கப்படுத்தினர். குறிப்பாக, குடிசை வீடுகள், கலிமண் தரை கொண்ட வீடுகளில் வாரம் ஒரு முறை சாணம் தெளித்து மொழுகுவதால், மண்ணை வாழிடமாக கொண்ட ஜீவராசிகள் வீட்டினுள் வராமல் இருக்கவும், ஓர் நோய் தடுப்பு தூணாகவும் சாணம் பயன்படுத்தினர். இந்த சூழ்நிலையில், குடிசை வீடுகளில் தேள், பாம்பு, கரையான், மூட்டை பூச்சு போன்ற ஜீவராசிகள் மத்தியில் மக்கள் வாழ்ந்து வந்தாலும், மண்ணை சார்ந்து மக்கள் வாழ்ந்து வந்ததால், ஓரு வித பாதுகாப்பை தன்னகத்தே உணர்ந்திருந்தனர். ஆனால், வைரவன் குப்பத்தில், ராஜம்மாள் (45) என்பவர் கூறியதில் “வீட்டின் முன்பு பளீச்சென்று இருக்க சாணம் மொழுகுவோம். இப்போது, இதற்காக, ஒரு பவுடர் கடையில் விற்கிறாங்க. அத போட்டு, மொழுகுனா பச்சை நிறம் பளீச்சுனு இருக்கு. ஆனால், அத வெறும் கையால தொடக் கூடாது. அப்படி தொட்டால் கை எரிச்சல் அடையும். கவர் போட்டுக்கிட்டுதான் எடுக்கனும்” என்றார். நாகரீகம் என்ற பெயரில் பசுமை நிறம் அதிகமாக கிடைக்க, பண்பாடு ஊடாட்டத்தின் வெளிப்பாடாக, ஒரு வித இரசாயனப் பவுடரை சாணத்துடன் கலந்து வீட்டின் வெளியே தெளிக்கப்படுகிறது.
(இரசாயணம் சாணம் பவுடர் மாதிரி)
பெர்டினண்ட் டோன்னிஸ் (Ferdinand Tonnies) கருத்தாக்கத்தின்படி, வீட்டின் வெளியே சாணம் தெளிக்கப்பட்டாலும், சாணம் தெளிப்பது விஷப் பூச்சிகளை அகற்ற என்ற உள்நோக்கம் மறைந்து, பசுமை (பச்சை) நிறம் அதிகம் வேண்டும், வீட்டின் வெளியே பளிச்சென்று இருக்க வேண்டும் என்ற ஆசையின் விழுமியங்களாக கொண்டு, பண்பாட்டு ஊடாட்டம் உண்டாகிறது. அத்துடன், சாணம் வெறும் கையால் கலந்து தெளிப்பது எந்தவித தீங்கும் இராது. ஆனால், இராசாயனம் கொண்ட சாணம் பவுடரை, வெறும் கையால் கலக்க முடியாது. அதற்கென பாதுகாப்பு உறை வேண்டும். வெளி சார்ந்த வாழ்வியலில் இவை பண்பாடு ஊடாட்டமாக மாறுகிறது. அதாவது, ஜெமியன்சாப்ட் (Gemeinschaft) கருத்தியலின்படி, வீட்டு வாசலில் குழந்தைகள் மண்ணோடு இயைந்த வாழ்க்கையை கொண்டிருப்பது யதார்த்தமானது. ஆனால், சாணத்துடன் இரசாயணப் பவுடர் கொண்டு சாணம் தெளிப்பது குழந்தைகளை அந்த மண்ணுடன் இயைந்து விளையாடுவதை தடுக்கும் முகாந்திரம் உள்ளது. ஏனெனில், இராசாயனம் பவுடர் பெரியவர்களின் கைகளை பாதிக்கும் என்ற நிலையில், குழந்தைகள் தரையோடு தரையாக விளையாடும்போது பாதிப்பு ஏற்படலாம் என்ற நிலை ஏற்படுகிறது. இதனால், டோன்னிஸ் அறிஞரின் ஜெமியன்சாப்ட் கருத்தாக்கத்தின் பண்பாடு ஊடாட்ட முறையில் குழந்தைகள், புனிதமாக கருதப்பட்ட மண்ணோடு தவழ்ந்து விளையாடுவது தடுக்கப்படுகிறது.
பண்பாடு வாழ்வியல் சூழலில் சாணம் தெளித்தல் ஓர் இயல்பான செயலாக இருந்தாலும், இரசாயணம் பவுடர் கலத்தல் என்ற ஊடாட்ட காரணத்தால் சாணம் தெளித்தலின் நோக்கம் மறைகிறது. வீட்டின் வெளியே சாணம் தெளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவை “சாணம் அல்ல. சானமாக காட்சி தரும் ஊடாட்டம்”. இதுபோன்ற, நமது வாழ்க்கை சூழலில் ஏற்படும் பண்பாடு ஊடாட்ட முறையால் நமக்கு ஒவ்வாத ஒன்றை, நமக்கு தேவைப்படாத ஒன்றை, நாம் ஏற்க முடியாத ஒன்றை நாமே வலியச் சென்று ஏற்கும் நிலையை பண்பாடு ஊடாட்டம் ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தில், சானத்துடன் இரசாயனப் பவுடர் கலப்பது என்ற நிலையில் இருந்து, பவுடரை மட்டும் தண்ணீரில் கலந்து தெளித்தல் என்ற நிலை எளிதாக உருவாகலாம். இதனால், சாணம் பயன்பாடு முழுவதுமாக மறைந்து, அதன் பயன்பாடு என்ன என்பதை இணைய தளத்தில் தேடும் நிலை ஏற்படலாம். வியாபார உத்தியில் முதலில் இரசாயணம் பவுடர் விற்பனை செய்யப்பட்டது போன்று, பிற்காலத்தில், இரசாயணப் பவுடரை விட நேரடியான சாணம் தான் நமக்கு நன்மை பயக்கும் என்ற விளம்பரம், பெரு நிறுவனங்கள் மூலம் விளம்பரம் செய்யும் சூழல் ஏற்படலாம். இதன் மூலம், நமது பண்பாட்டு முறையை வேறொரு பண்பாடு சார்ந்து வாழ்ந்தவர் நமக்கு விளக்கும் நிலை ஏற்படும். அப்போது, ஒருவர் தனக்கு சொந்தமான மாடுகளின் மூலம் அவர் சாணம் பெற்ற நிலையில் இருந்து, நிறுவனங்களின் மாடுகளின் மூலம் பணம் கொடுத்து சாணம் வாங்கும் நிலை ஏற்படும். இவை அனைத்திற்கும், பண்பாடு ஊடாட்டம் முக்கிய காரணியாக அமையும். அதனால், நம்மை அறியாமல், நம்முள் புகுந்திருக்கும் பண்பாடு ஊடாட்டம் என்ன என்பதை நாம் அறிய வேண்டும். அதனை களைய வேண்டும். இல்லையெனில், டோன்னிஸ் அறிஞரின் ஜெமியன்சாப்ட் என்ற வாழ்வியல் சூழல் கெசில்சாப்ட்பாக என்ற வாழ்வியல் சூழலாக மாறும். இதனால், மனிதர்களின் வாழ்வியல் சார், மரபு சார் தனித்துவம் தனிமைப்படும்.
(இரசாயணம் சாணம் பவுடர் மாதிரி)
பெர்டினண்ட் டோன்னிஸ் (Ferdinand Tonnies) என்ற அறிஞரின் ஜெஸல்சாப்ட் (Gesselschaft) என்ற கருத்தியல் அடிப்படையில் நகரத்தில் உள்ள பலர் வீட்டின் தரை பளபளப்பாக இருக்க, வழவழப்பு மிக்க டைல்ஸ் போடப்பட்டது. பின்னர், தரையை சுத்தம் செய்ய இரசாயண பூச்சுகள் இடப்பட்டது. இவை கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், இந்த இரசாயணம் நம் வாழ்வியலுக்கு அப்பாற்பட்டது. ஏனெனில், மாடு சாணம் இடும், அதனை எடுத்து பயன்படுத்துவது வாழ்வியல் சார்ந்து அமைந்தது. ஆனால், இரசாயணம் அவ்வாறு இல்லை. நம்மிடம் இருந்தே அவை நமக்கு கிடைப்பது இல்லை. அதாவது, சாணம் வந்த வழி மாடுகள். அவை இயற்கையானது. ஆனால், இரசாயனம் வந்த வழி அறிவியல் பூர்வமானது. பிரெஞ்ச் அறிஞர்களான ஏகல் (Egal) மற்றும் அடர்னோவின் (Adorno) “இயக்கவியல்” பார்வையில் இதனை ஆராயலாம். ஏகல் பார்வையில் “இரசாயனம் என்பது அறிவியல்” ஆனால், அடர்னோ பார்வையில் “இரசாயனம் என்பது எதனை உள்ளடக்கியது, எங்கிருந்து வந்தது, எந்த பண்பாடு சார்ந்தது போன்றவற்றை ஆராயும்”. அந்த வகையில், ஏகல் பார்வையில் சாணம் என்பது மாடுகளின் எச்சம். அடர்னோ பார்வையில் சாணம் என்பது நமது பண்பாடு சார்ந்தது, நம்மில் இருந்து வந்தது, நோய் கிருமி தடுக்க வல்லது என்ற நிலையை உணர்த்துவது. ஆதலால், பண்பாடு ஊடாட்டம் என்பது ஏகல் பார்வையில் மட்டுமல்லாமல், அடர்னோவின் பார்வையையும் கொண்டால் மட்டுமே, சாணம் மீது மட்டுமில்லாமல், அனைத்து தளங்களிலும் பண்பாடு ஊடாட்டம் உள்ளதை அறியலாம்.
ஜேம்ஸ் டியூலியின் (James Tully) வளர்ச்சி (Progress) என்ற கருத்தியலில் ( வளர்ச்சி மொழி என்பது ஒடுக்குதலுக்கான மொழி ). அதாவது, “வளர்ச்சி என்ற நிலையில் ஒடுக்குதல், இழப்புகள் ஏற்படுத்துதல், அகலுதல் ” அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, சாணம், இரசாயணம் பவுடர் கொண்டு தெளித்தல், வீட்டில் அதிக பசுமை நிறம் கொண்டு “பளீச்” என்று இருப்பது, சாணம் தெளித்தலில் இருக்கும் நாகரீக வளர்ச்சி எனக் கொள்ளலாம். ஆனால், இதில், மண் சார்ந்த வாழ்வியல் நம்மை விட்டும் அகன்று, ஒடுக்கப்படுகிறது, குழந்தை மண் சார்ந்து விளையாடுவது இழக்கப்படுகிறது, சாணம் என்ற நோய் எதிர்ப்பு மருந்து நம்மை விட்டு அகலுகிறது. அதனுடன், மாடுகளின் சாணம் ஒரு நிலையில் தேவையில்லாமல் இரசாயனம் மட்டும் தேவையாக கொள்ளலாம். அத்தகைய நிலையில், மாடுகளிடம் இருந்து இலகுவாக கிடைத்த சாணம் மறைந்து, இரசாயனம் பவுடர் ஒரு மொழுகலுக்கு குறிப்பிட்ட ரூபாய் செலவு செய்யும் வியாபார நிலை ஏற்படும். சாணத்தில் இயற்கையான முறையில் விஷப் பூச்சுகளின் எதிர்ப்பு பண்பு இருந்தும், பண்பாடு ஊடாட்டம், வளர்ச்சி என்ற நிலையில் எதிர்ப்பு பண்பு இல்லாமல், இயற்கையான வாழ்வியல் ஒடுக்கப்படுகிறது. அதேபோல, பண்பாடு ஊடாட்டம் என்பது நம்மை அறியாமல், நம்மை தாழ்த்த, நம்மை ஒடுக்க, நமக்கு எதிராக, நாமே உயர்த்தி பிடிக்கும் நஞ்சு என்பதை அறியலாம்.
*நம் வாழ்வியலில், பல தளங்களில், பல வடிவங்களில் பண்பாடு ஊடாட்டம் இருப்பதை உணர வேண்டும், இதனால் நாம் இழந்தது என்ன என்பதை ஒரு சொடக்கு நேரத்திலாவது, நம் சிந்தனையை தூண்ட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
சான்றாதாரம் :
- Ferdinand Tönnies (ed. Jose Harris), Community and Civil Society, Cambridge University Press (2001), hardcover, 266 pages, ISBN 0-521-56119-1; trade paperback, Cambridge University Press (2001)
- Ferdinand Tönnies, Ferdinand Tönnies Gesamtausgabe {TG}, critical edition, 24 vols., tom. II (forthcoming), ed. Lars Clausen, Alexander Deichsel et al., Berlin/New York (de Gruyter): (1998)
- Lefebvre, Henri. [1974] 1991. The Production of Space. Translated by N. Donaldson-Smith, Oxford: Basil Blackwell.
- James Tully, Emeritus Faculty, University of Victoria. Retrieved 18 November 2014.
- Pulicat Lake: Ecologically Important Areas of Tamil Nadu Coast". Archived from the original on 10 April 2009.
- சுரேஷ் குருபாய்






Onr of My scholar did field work in thus area for his Ph. D
ReplyDeleteOh its super
DeleteCan i get that paper for refference
Deleteஅருமை..
ReplyDelete