சர்வதேச கருத்தரங்கு vs கோயில் திருவிழா
சர்வதேச கருத்தரங்கு vs கோயில் திருவிழா
(International conference Vs temple festival )
அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளிலும், உள்நாட்டிலும் சர்வதேச கருத்தரங்குகள், ஆய்வு கட்டுரைகள் சமர்பித்தல் போன்றவை பெரிய நிகழ்வாக நடைபெறும். உலக அளவில் சிறந்த கல்வியாளர்கள் தங்களின் ஆய்வு படைப்புகளை கருத்தரங்கில் சமர்பிக்கும்போது, அவர்களின் ஆய்வு பார்வைகள் மற்ற கல்வியாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் புதிய பரிமாணத்தை உருவாக்கும். கருத்தரங்கு நடக்கும் இடம் அதற்கான சிறந்த தளமாக அமையும். அதனால், சர்வதேச கருத்தரங்கு நடத்த பல முன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். இதேபோன்று, கோயில் திருவிழாவும் நாட்டார் கலைகளில் சிறந்தவர்கள் மூலம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தங்களின் தனித் திறமையை வெளிப்படுத்தி ஊரே ஒன்று கூடி, பல நேச உணர்வுகளை புதுப்பித்துக் கொள்ளும் படிப்பினைகளை வழங்கும். அதற்கான பரிமாணங்கள் பல வடிவங்களில் வெளிப்படும். கோயில் திருவிழாவை நடத்தவும் பல முன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்.
சர்வதேச ஆய்வு கருத்தரங்கு என்பது ஒரு முக்கிய கல்வியாளரை அல்லது அறிஞரை முன்னெடுப்பாக கொண்டு, அவரின் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு பல தளங்களில், பல பார்வைகளில் ஆய்வு கட்டுரைகள் அமையும். உதாரணத்திற்கு, பிரெஞ்ச் தத்துவ அறிஞர் தெளுஸ் குறித்த சர்வதேச கருத்தரங்கு எனில், அவரின் வேர்க்கிழங்கு (Rhizome), பெருதிரள் (assemblage) போன்ற கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு கட்டுரைகள் இருக்கும். இதில், தெளுஸ் மட்டுமே முன்னோடியாக கொண்டு, அவரை அடிப்படையாக கொண்டு ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்படும். அதேபோல், கோயில் திருவிழா எனில், ஒரு குறிப்பிட்ட கடவுளை முதன்மையாக கொண்டு, பல தளங்களில், பல பார்வைகளில் அக்கடவுள் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும். உதாரணமாக, காஞ்சிபுரம் அடுத்துள்ள வெம்பாக்கம் கிராமத்தின் திரெளபதி அம்மன் கோயில் திருவிழா என்பது அந்த அம்மன் தெய்வத்தை அடிப்படையாக கொண்டு பல தளங்களில் நிகழ்ச்சிகள் நடக்கும். திரெளபதியை மட்டுமே முதன்மையாக கொண்டு, பல தளங்களில் பல பார்வைகளில் அவரை சார்ந்த நிகழ்வுகள் நடக்கும்.
தெளுஸ் அறிஞரின் கோட்பாடுகளை ஆய்வாளர்கள் தங்களில் வாழ்வியல் சூழல் சார்ந்த ஆய்வு தளங்களில் பயன்படுத்தி, ஆய்வுக்கான முடிவுகள் அறியப்படும். இதில், கல்வியாளர்கள் தங்களின் சிந்தனையில் புதிய ஆய்வு பாதைகள் மட்டுமின்றி, கடந்த கால, சமகால ஆய்வு நிலைகளை அறிந்து, எதிர்கால நிலைகள் குறித்து சில உறுதியான நிலைப்பாடுகளை கொண்டிருக்க முடியும். அதேபோன்று, திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவில் திரெளபதி அம்மன் என்ற “தெய்வ கட்டமைப்பை” கோட்பாடாக கொண்டு, அவர் சார்ந்த வாழ்வியலை கூத்து, நாடகம், பாடல், பிரசங்கம், சடங்கு, சம்பிரதாயம் போன்ற பல தளங்களில் பயன்படுத்தி, அதன் மூலம் திருவிழாவின் நோக்கத்தை மக்கள் அறிகின்றனர். அதாவது, ஒவ்வொரு நிகழ்ச்சியும் எதனை முன்னிறுத்துகிறது, எதற்காக சில இதிகாச கதாபாத்திரங்கள் முன்னிலை பெறுகிறது, அதில் பங்கேற்பாளர்களின் கதாபாத்திரங்கள் என்ன, அவர்களின் செயல்பாடுகள் என்ன, இதனால் விளைந்தவை என்ன என்பதை அம்மனின் வாழ்வியலோடு ஒப்புமை படுத்தி, கடந்த கால, சமகால மக்களின் வாழ்வியல், எதிர்கால நிலைகள் குறித்து சில உறுதியான நிலைபாடுகளை அறிகின்றனர். இதில், நாட்டார் கலைஞர்கள் மட்டுமின்றி, ஊர்மக்களும், வெளி மாநில, வெளி நாட்டு மக்களும் பங்கேற்பாளர்கள் என்ற முறையில் சில தரவுகளை அறிந்து தங்களின் வாழ்வியலோடு ஒப்புமை படுத்தி, பல படிப்பினைகளை அறிந்துக் கொள்ள முடியும். இதில், நாத்திகராக இருந்தாலும், ஆத்திகராக இருந்தாலும் அவர்களின் பார்வைகளுக்கு ஏற்ப படிப்பினை பெறுவர்.
பிரெஞ்ச் அறிஞர் தெளுஸ் ( Deleuze) அவர்களின் கோட்பாடு அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளுபவர்கள் இனவரையியல் அடிப்படையில், ஆழமான நேர்கானல் அடிப்படையில், பொருள் கூறு சார்ந்த (Qualitative)முறையில் தங்களின் ஆய்வுத் தலைப்புக்கு ஏற்ப ஆய்வு மேற்கொள்ளலாம். அதேபோன்று, திருவிழா காலங்களில் ஊர்மக்கள் பல ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். அதாவது, ஆய்வு படிநிலைகள், மேற்கத்திய ஆய்வு பாணி குறித்து ஏதும் அறியாமல், மானுடவியல் (anthoropology) முறையில், இனவரையியல் (Ethnography)அடிப்படையில், மக்களோடு மக்களாக ஒன்று கூடி, ஒன்றாக தூங்கி, ஒன்றாக உணவருந்தி, ஒருவரோடு ஒருவர் சேர்ந்து, பொதுவேலையை தன் வேலையாக செய்து தங்களின் எண்ண ஓட்ட தகவல்களை இயல்பாக பறிமாறிக் கொள்கின்றனர். இதனுடன், திரெளபதி அம்மன் கோயில் திருவிழா என்பதால், அந்த கடவுளை அடிப்படையாக கொண்டு, அம்மன் வாழ்வியல் தத்துவங்களை, தங்கள் வாழ்வியலோடு ஒப்புமைபடுத்தி, பல விசயங்கள் குறித்து பேசுகின்றனர்.
இதில், இருந்து சில கேள்விகளுக்கான விடைகளை அறிகின்றனர். அதாவது, திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவானது அம்மனை ஒட்டிய பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும், அதில் அந்த அம்மன் தனது வாழ்க்கையை எவ்வாறு எதிர் கொண்டார், அதில் என்னெண்ண நிகழ்வுகள் நடந்தது என்பது குறித்து விளக்கப்படும். இதன் மூலம், ஊர்மக்கள் தங்களின் வாழ்வியலோடு இதனை ஒப்புமை படுத்தி, தங்களின் மனதில் இருந்த சில குழப்பங்கள், குறைகள் நிவர்த்தி செய்ய முயல்கின்றனர். அதனுடன், இதனை மற்றவர்களுடன் பேசி அவர்களின் நிலைகளை அறிந்து தங்களின் வாழ்வியலை கூறி, இருவரும் திரெளபதி அம்மனை அடிப்படையாக கொண்டு தங்களின் நிகழ்வுகளுக்கு ஆய்வு பகுப்பாய்வு செய்து தங்களின் சில கேள்விகளுக்கான பதில்களை, ஆய்வுக்கான நோக்கத்திற்கு தாங்களே விடை கண்டறிகின்றனர். சுய மானுடவியல் எனலாம். அதனுடன், மக்களின் மனதில் இருக்கும் சஞ்சலங்களுக்கு அம்மனின் வாழ்வியலை, கூத்து, நாடகம், பிரசங்கம் போன்றவற்றுடன் தங்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து, ஒப்புமை படுத்தும் போது, சிந்தித்து, தங்களின் கேள்விகளுக்கு சில புரிதல்களை அடைகின்றனர். அல்லது, தங்களின் மன ஓட்டங்களை கடவுளிடமோ, தங்களின் அருகாமையில் அமர்ந்து இருப்பவரிடமோ சொல்லும்போது, மனம் பாரம் குறைந்ததாக உணர்கின்றனர். ஆக, தங்களின் மன எண்ண ஓட்டத்தின் கேள்விகளுக்கு, மனதின் ஆய்வுக்கான கேள்விகளுக்கு பதில் கிடைத்ததாக உணர்கின்றனர்.
சடங்கு, சம்பிரதாயம் போன்றவை நம்பிக்கை அடிப்படையில் செய்யப்படுகிறது. ஆய்வோடு மனதை ஒன்றுபடுத்துவதுபோல, அம்மன் கோயில் திருவிழாவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த காப்பு கட்டுதல், தீ மிதித்தல் போன்ற நிகழ்வுகளை செய்கின்றனர். சர்வதேச கருத்தரங்கு நடக்கும் போது, ஆய்வு சுருக்கத்தில் எந்த ஆய்வு விருப்பப்படுகிறதோ அதனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என கல்வியாளர்களுக்கு, பார்வையாளர்களுக்கு தோன்றும். அதுபோல, திருவிழாவின்போது கூத்து நடைபெறுகையில் எந்த வேசம் பிடிக்கிறதோ, அதற்காக காத்திருந்து, தேடி பிடித்து பார்க்கும் சூழல் இருந்து வருகிறது. சர்வதேச கருத்தரங்கு 10 நாட்கள் நடத்தப்படுகிறது எனில் நேரம் விரையம் செய்யாமல் சரியான நேரத்தில் சரியான நிகழ்வு நடத்த வேண்டியது அவசியம். எந்த நேரத்தில் ஆய்வு சமர்பிப்பு, எந்த நேரத்தில் தேநீர் அருந்துவது, எந்த நேரத்தில் உணவு அருந்துவது என சரியாக இருக்க வேண்டும். இதற்கு, சூரியன், நிலவு அடிப்படையாக கொண்டு பகல் நேரம் வரையறை செய்யப்படுகிறது. அதேபோன்று, கோயில் திருவிழா 15 நாட்களுக்கு குறித்த நேரத்தில் பல நிகழ்வுகளை செய்கின்றனர். இதற்கு நல்ல நேரம் என்பதை கிரகங்களை அடிப்படையாக கொண்டு, நம்பிக்கை அடிப்படையில், சில சடங்கு, சம்பிரதாயங்களும், ஓய்வுக்கு ராகு, கேது போன்ற நிலைகளை அடிப்படையாக கொண்டு நேரம் பிரிக்கின்றனர். ஆக, இரண்டிலும் நேரம் சரியாக பின்பற்ற முயற்சி செய்யப்படுகிறது.
சர்வதேச கருத்தரங்கு என்பது பெரும்பாலும் நகரத்தில் நடைபெறும். ஆனால், திருவிழா என்பது பெருமளவு கிராமத்தில் நடைபெறும். இதில், டோன்னிஸ் (Tonnies)என்ற அறிஞரின் கருத்தாக்கத்தின் படி, கெசில்சாப் (Gesselschaft) (தனி நபர் சாராத வலுவான சமூக/குழு உறவுகள்) சர்வதேச கருத்தரங்காகவும், கெமின்சாப் (Gemeinschaft)(நெருக்கமான/வலுவான தனி நபர் குடும்ப சமூக உறவுகள்) கோயில் திருவிழாவாகவும் உள்ளது. அதனால், டோன்னிஸ் பார்வையில் சர்வதேச கருத்தரங்கு உள் அரங்கிலும், கோயில் திருவிழா திறந்த வெளியிலும் நடைபெறுகிறது. கெமின்சாப், கெசில்சாப் என்பது மட்டுமே இரு பிரிவாக உள்ளதே தவிர, இரண்டின் அடிப்படை, செயல்பாடு ஒன்றுபட்டுடனே உள்ளது. அதனால், கோயில் திருவிழா பல்வேறு ஆய்வு தளங்களுக்கு அடிப்படையாக உள்ளதை நாத்திகர்கள் ஆத்திகர்களாகவும், ஆத்திகர்கள் நாத்திகர்களாகவும் மாறினால் அறிய முடிகிறது. அல்லது பகுத்தறிவாளராக இருந்தால், சர்வதேச கருத்தரங்கும், கோயில் திருவிழா இரண்டும் பார்வையை விரிவுப்படுத்தும் ஆய்வுத் தளம் என்பதை எளிதாக அறியலாம்.
குறிப்பு : புகைப்படத்தில் இருப்பவர் பிரெஞ்ச் தத்துவ அறிஞர் தெளுஸ். அடுத்து, காஞ்சிபுரம் அடுத்துள்ள வெம்பாக்கம் கிராமத்தின் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவின் புகைப்படங்கள்.
-சுரேஷ் குருபாய்




Comments
Post a Comment